டெல்லி:
பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்வதற்கு மத்திய அரசு அளித்த காலஅவகாசம் இன்றுடன் முடிந்தது. இதன் பின்னர் மார்ச் 31-ந் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் உரிய விளக்கத்துடன் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம். இதன் பிறகு யாராவது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருப்பது குற்றம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்தது. தனி நபர் ஒருவர் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் அதிகபட்சமாக 10 நோட்டுகள் வரை வைத்துக்கொள்ளலாம். ஆராய்ச்சியாளர் என்றால் 25 நோட்டுகள் வைத்துக் கொள்ளலாம். இதற்கு அவசர சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு மேல் வைத்திருந்தால் அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு அபராதம் விதிக்க அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது அவர் வைத்திருக்கும் தொகையில் 5 மடங்கு ஆகிய இரண்டில் எது அதிகமோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும். மார்ச் 31ம் தேதிக்கு பிறகு இந்த ரூபாய் நோட்டுக்களுக்கு சமமான மதிப்பை வழங்கும் சட்டப்பூர்வ கடமையில் இருந்து ரிசர்வ் வங்கிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்தார். இதன் மூலம், இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது
இந்த குற்றத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு ஏற்கனவே திரும்ப பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஜூன் 30ம் தேதி வரை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. .