மும்பை

மறைந்த பாலிவுட் நடிகர் காதர்கான் பத்ம விருதுகளுக்காக நான் யாரையும் காக்காய் பிடிக்க மாட்டேன் என தனது கடைசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் காதர்கான் நடிகர், இயக்குனர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டவர்.  இவர் கடந்த 1973 ஆம் வருடத்தில் இருந்து திரைத்துறையில் பணி ஆற்றி வருகிறார்.   வில்லன், நகைச்சுவை நடிகர், குணசித்திர நடிகர் என அனைத்து வேடங்களிளுமாக சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.   அது மட்டுமின்றி 250 படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.

டிசம்பர் 31 ஆம் தேதி மரணம் அடைந்த காதர்கானுக்கு கடந்த 2016 ஆம் வருடம் பத்மஸ்ரீ விருது அளிக்க வேண்டும் என அவர் திரையுலக சகாக்கள் பரிந்துரை செய்தனர்.   அப்போது காதர்கான், “அரசு எனது பணியை நான் நன்கு புரிந்தேன் என்றால் அவர்களாக விருது அளிக்க வேண்டும்.   இதற்காக எனக்கு யாரும் சிபாரிசு செய்யக் கூடாது” என தெரிவித்தார்.

அந்த வருட பத்ம விருதுகள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.   அப்போது அவர் அளித்த பேட்டியில், “இந்த விருதுகள் கொடுக்கப்பட்டவர்கள் அனைவரும் அரசில் உள்ளவர்களை காக்காய் பிடித்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.  நல்லவேளை எனக்கு விருது வழங்கவில்லை.  வழங்கி இருந்தால் நானும் காக்காய் பிடிப்பவன் என கூறப்பட்டிருப்பேன்.

விருதுகள் வாங்குவது பெருமைக்குரியது என்பதை நானும் அறிவேன்.   ஆனால் தற்போது திறமை உள்ளவர்களுக்கு விருது அளிக்கப்படுவதில்லை.   காக்காய் பிடிப்பவர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படுகிறது.   நான் விருதுக்காக எப்போதும் காக்காய் பிடிக்க மாட்டேன்.   அதனால் விருது கிடைக்காதது குறித்து எனக்கு வருத்தமில்லை.   என் பெயரை பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.

காதர்கான் அதற்குப் பிறகு எந்த பேட்டியும் அளிக்கவில்லை.   இதுவே அவருடைய கடைசி பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.