சேலம்:
“நடிகர் சங்கத்துக்கு வரும் ரூ. 24 லட்சம் வருமானத்தில் ஊழல் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வரும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், விஷால் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீசு அனுப்பி உள்ளோம். இது தொடர்பாக அவர்கள் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக பெறாறுப்பு வகிக்கும் சரத்குமார், வர இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் தமது அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டி சேலம் நாடக கலைஞர்களை சந்தித்தார். பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
“கடந்த மூன்று நாட்களாக மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று கலை உலக சகோதர, சகோதரிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அடுத்த மாதம் நடைபெறற உள்ளதால் நடிகர் சங்கத்தில் இதுவரை என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டி என்றும் போல் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் எப்படி கட்ட முடியும்? எதிர் அணியினர், பூச்சி முருகனிடம் வழக்கை வாபஸ் பெறச் சொல்லலாம். அல்லது புதிய திட்டமோ இருந்தால் என்னிடம் பேசி இருக்கலாம். அப்படி உங்களது திட்டத்தை நடிகர் சங்கம் நிராகரித்தால் நீங்கள் கூறும் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் எதிர் அணியினரோ, ஒப்பந்தம் போட்டதில் இருந்து திட்டம் தீட்டியது வரை எதுவும் கூறாமல் இப்போது குற்றச்சாட்டுகளை மட்டும் கூறி வருகின்றனர்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டியிருந்தால் இந்த தேர்தலில் நான் போட்டியிட்டே இருக்க மாட்டேன். இந்த வழக்கை முடித்து புதிய கட்டிடம் கட்ட வேண்டிய பணி எனக்கு இருக்கிறது. நடிகர் சங்கம் மீண்டும் கடனில் மூழ்கி விடக்கூடாது என்ற நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறேன்.
நடிகர் சங்கத்துக்கு வரும் ரூ. 24 லட்சம் வருமானத்தில் ஊழல் நடந்து விட்டதாக ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றனர். இவ்வாறு கூறுவதன் மூலம் நலி வடைந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி தடைபடுவதோடு, நடிகர் சங்க வருமானத்தையும் தடுப்பதாகவும் ஆகிவிடும். தவறான குற்றச்சாட்டுக் களை தெரிவிக்கும் நடிகர்கள் எஸ்.வி.சேகர், விஷால் ஆகிய இருவருக்கும் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் சார்பில் நோட்டீசு அனுப்பி இருக்கிறோம். இது தொடர்பாக அவர்கள் 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.
ரகசியத்தை வெளியிடுவேன் என்று நான் சொன்னது யாரையும் மிரட்டுவதற்காக அல்ல. உணர்ச்சி வேகத்தில் அப்படி கூறிவிட்டேன். சங்கத் தேர்தலில் எங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது,” என்று சரத்குமார் தெரிவித்தார்.