download
“இந்தியர்களுக்கு தங்களைத் தாங்களே ஆளும் தகுதி இல்லை. அவர்களுக்கு சுதந்திரம் தேவையிலலை” என்று இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர்ச்சில் சொன்னதாக சொல்லப்படுவது உண்டு.
இங்கு நடக்கும் ஒவ்வொரு தேர்தலும், அரசியல் கட்சிகளின் நடவடிக்கையும் அதைத்தான் நிரூபிக்கிறது.
சாதி, மத பேதமற்ற அரசு அமைக்கப்பட வேண்டுமென அரசியல் சட்டம் சொல்கையில், தேர்தல்களில் இவை இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்” என்ற கோசங்கள் எழுப்பப்பட்டாலும், நிஜ மன்னர்களான அரசியல்வாதிகள்,  அப்பாவி ஏழை மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதும் நடக்கிறது.
சுதந்திரம் அடைந்த தருணத்திலேயே… முதல் தேர்தலிலேயே…  காங்கிரஸ் சார்பாக சில பல அணாக்கள் கொடுக்கப்பட்டு ஓட்டுக்கள் “வாங்கப்பட்டதாக” செய்திகள் உண்டு.
தமிழகத்தைப் பொறுத்தவரை, தி.மு.க.தான் இந்த “பணமளிக்கும் பணியை” “நிர்வாக” ரீதியாக செய்தது என்கிற குற்றச்சாட்டும் உண்டு. கடந்த தி.மு.க. ஆட்சியில் இடைத் தேர்தல்களில்.. குறிப்பாக திருமங்கலத்தில் தி.மு.க. சார்பாக அழகிரி சிறப்பாக செய்தார். “திருமங்கலம்” பார்முலா என்று அழைக்கப்படும் அளவுக்கு அது பிரபலமானது.
இதில் அ.தி.மு.க. மேலும் “சிறப்பாக” செயல்பட்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக் கட்சி, “மிகத் திறம்பட” செயல்பட்டு “முறையாக” அனைவருக்கும் பண விநியோகம் செய்தது, அதற்கு அரசு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டும் உண்டு.
இவை தவிர வேறு பல கட்சிகளும், தங்கள் “சக்திக்கேற்ப” பண விநியோகம் செய்தன என்பதையும் மறுக்க முடியாது.
இதன் இன்னொரு பரிணாமமாக, ஊடகங்களை விலைபேசுவது நடந்தது. தங்களுக்கு சாதகமான செய்திகளையும், தங்களது எதிரிகளின் இமேஜை உடைக்கும் செய்திகளையும் வெளியிட பேரம் பேசப்பட்டது.
அடுத்து, அரசியல் கட்சிகளே ஊடகங்களை நடத்தவும் ஆரம்பித்து, வருடம் முழுதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதையும் பார்க்கிறோம்.
இப்போது அடுத்தகட்டத்துக்கு சென்றிருக்கிறது தி.மு.கழகம். சமூகவலை தளங்களில் தங்களுக்கு சாதமான கருத்துக்களை வெளியிட  பணம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டு பா.ம.க. நோக்கியும் நீள்கிறது.
இந்த இரண்டு கட்சிகள் மட்டுமின்றி வேறு பல கட்சிகளும் இப்படி செயல்படுகிறது என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. அந்தந்த  கட்சி ஆதரவாளர்கள் என்ற பெயரில்,  செயல்படும் பலர் மிக மோசமாக வெறிகொண்டு எழுதுவதைப் பார்க்கையில் இது உறுதிப்படுகிறது.
அரசியல்வாதிகள் தாங்கள் அளிக்கும் கொள்ளையில் மக்களையும் பங்குதாரர்களாக்கி, அவர்களின சிந்தனையை  முடக்கும் போக்கு இது.
சர்ச்சில் சொன்னது போல, “சுந்திரத்துக்கு.. மக்களாட்சிக்கு” நமக்கு தகுதி இல்லை என்பது போலவே, சமூகவலைதளங்களைப் பயன்படுத்தவும் தகுதி இல்லை என்றே தோன்றுகிறது.