ஐதராபாத்:
மத்தியஅரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு, தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
‘படையப்பா இன்னும் பல சாதனைகள் படையப்பா’! என வாழ்த்தி உள்ளார்.‘
சர்வதேச திரைப்பட விழாவின் 50-வது ஆண்டு கோவாவில் நடைபெற உள்ளது. நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், 76 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படும் எனவும், 26 இந்திய திரைப்படங்கள் மற்றும் 15 இந்திய ஆவணப்படங்கள் திரையிடப்படும் எனவும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
“சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ ( ICON OF GOLDEN JUBILEE) என்ற விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுகிறது. இதனை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சி யடைகிறேன்,” என அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிக்கு திரையுலகினர் உள்பட அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.
அதில், ‘அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன்’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.