li

 

ஸைட்ஸ் ஆஃப்:

 

பார்ப்பதற்கு அப்”பாவி” போல் இருக்கும் அந்த திரைப்பாடலாசிரியர் தற்போது “வெளுத்து வாங்கு” படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தை இயக்குவது புரட்சி பேசும்  மூன்றெழுத்து இனிஷியல் டைரக்டர்.  ஆமாம். அந்த “சின்ன” ஹீரோவின் தந்தைதான்.

இரு வாரத்துக்கு முன் இந்தப் படத்தின் சண்டைக் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது.  இரு ஸ்டெண்ட் நடிகர்கள் வேகமாக ஓடி வந்து ஆட்டோவின் முன் கண்ணாடி மீது  மோதுவது போல் அந்த காட்சி எடுக்கப்பட்டது.

இதில் எதிர்பாராத விதமாக  அந்த இரு ஸ்டண்ட் நடிகர்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒருவருக்கு விலாவில் லேசான காயம்.

ஆனால், இன்னொருவருக்கு விலா மற்றும் வலது கையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. கையில் 18 தையல் போட வேண்டிய நிலை.

சிகிச்சை அளித்த மருத்துவர்கள், “ஒரு மாதம் அவசியம் ஓய்வெடுக்க வேண்டும். உடலை.. குறிப்பாக கையை அசைக்கவே கூடாது” என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

இயக்குநரிடம் வந்து இதைச் சொல்லியிருக்கிறார் அந்த ஸ்டண்ட் நடிகர்.   மேலும்,”நல்ல அடி. என்னாலேயே என்னை கவனித்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே ஊரில்  கூலி வேலை பார்க்கும் மனைவியின் பராமரிப்பல் ஒரு மாதம் இருந்து வருகிறேன்” என்று சொல்லியிருக்கிறார் அந்த வறுமையான ஸ்டண்ட் நடிகர்.

இனிசியல் இயக்குநரும் ஓ.கே. என தலையசைத்தார்.  “பணம்…” என்று இழுத்திருக்கிறார் அந்த ஸ்டண்ட் நடிகர்.

அடிபட்ட “புலி”யாய் எகிறிவிட்டார் இயக்குநர்.  “பணம்னு கேட்டுட்டு வந்து நிக்காதே.. வேணும்னா தினமும் ஷூட்டிங் வா. நீயும் வேலை பார்த்ததா கணக்கு காட்டி சம்பளம் தரச் சொல்றேன். மத்தபடி  எந்த உதவியும் கேட்காதே” என்று கத்தியிருக்கிறார்.

பரிதாபத்துக்குரிய அந்த ஸ்டண்ட் நடிகர் ஒரு ஈழத்தமிழர். அகதியாக வந்தவர் பிழைக்க வழியின்றி எப்படியோ ஸ்டண்ட் நடிகர் ஆகி, வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கிறார். இதில் போதுமான வருமானம் இல்லாததால் தனது குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வரவில்லை. இவர் நண்பரரின் அறையில் தங்கியிருக்க,, மனைவி வெளியூரில் கூலி வேலை செய்து குழந்தைகளைப் பராமரித்து வருகிறார்.

“உலகம் முழுதும் படத்தை வெளியிட்டும், நட்சத்திர கலை நிகழ்ச்சி நடத்தியும்  ஈழத்தமிழரின் பணத்தைப் பிடுங்குகிறார்கள். அது மட்டுமல்ல அந்த இயக்குநரின் “ஹீரோ” மகன் திருமணம் செய்திருப்பது ஈழப்பெண்ணைத்தான்.

ஆனால் இயக்குநருக்கு மனம் இரங்கவில்லையே” என்ற ஆதங்கக் குரலும் கோடம்பாக்கத்தில் ஒலிக்கிறது.

ஈழத்தமிழரான அந்த ஸ்டண்ட் நடிகர், தற்போது வலியோடும், கண்ணீரோடும் தினமும் படப்பிடிப்புக்கு வந்து செல்கிறார்.

“இயக்குநரும் அவரது மனைவியும் மூச்சுவிட பயிற்சி, உட்கார்ந்து எழுந்திருக்க பயிற்சி என்று ஏதேதோ பயிற்சிகளுக்கு பணத்தை அள்ளிக்கொட்டி சென்று வருகிறார்கள். முதலில் பாதிக்கப்பட்டவங்களைப் பார்த்து பரிதாபப்பட பயிற்சி எடுத்துக்கொள்ளட்டும்” என்ற குரலும் கோலிவுட்டில் ஒலிக்கிறது.