டில்லி
வீட்டில் புதுந்து திருட முயன்ற நைஜீரிய நாட்டு இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து பலரும் அடித்து உதைத்துள்ளனர்.
தெற்கு டில்லி பகுதிய்ல் உள்ளது மால்வியா நகர். இங்கு ஆஃப்ரிக்காவை சேர்ந்தவர்கள் பலர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் கிருஷ்ண குமார் என்பவரின் வீட்டில் அவர் உறங்கிக் கொண்டிருக்கும் போது அலமாரியை திறக்கும் சப்தம் கேட்டு விழித்துள்ளார். அங்கு அவர் ஒரு நைஜீரியா நாட்டை சேர்ந்த நபர் அலமாரியில் உள்ள பொருட்களை திருடுவதைக் கண்டு அவரை பிடித்து சப்தம் போட்டுள்ளார்.
பின்பு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பலர் அங்கு கூடி விட்டனர். அந்த நைஜீரியரை வெளியே இழுத்து வந்து அங்கிருந்த விளக்கு கம்பம் ஒன்றில் கட்டி வைத்துள்ளனர். பிறகு பலரும் சேர்ந்து அவரை கம்பால் அடித்து உள்ளனர். அந்த நைஜீரியர் தன்னை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டும் அவரை அந்த கும்பல் விடவில்லை. இந்தக் கொடூரத்தின் உச்சக் கட்டமாக ஒருவர் அந்த ஆஃப்ரிக்கரின் காலை பிடித்துக் கொள்ள மற்றவர் அவருடைய உள்ளங்காலில் கம்பால் ஓங்கி ஓங்கி அடித்துள்ளார். பிறகு போலீசார் வரவழக்கப் பட்டு நைஜீரியர் ஒப்படைக்கப் பட்டுள்ளார்.
படுகாயங்களுடன் மயக்கம் அடையும் நிலையில் இருந்த அந்த நைஜீரியரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். போலீசாரிடம் அங்குள்ளவர்கள் அந்த நைஜீரியர் தப்பித்து செல்லும் போது படிகளில் தவறி விழுந்ததால் அடிபட்டதாக கூறியதை நம்பிய போலிசார் யாரையும் ஒன்றும் விசாரிக்கவில்லை. இந்நிலையில் கும்பலில் இருந்த ஒருவர் இந்த நிகழ்வை மொபைல் மூலம் விடியோ எடுத்துள்ளார், அந்த வீடியோ வைரலாக பரவி உள்ளது. ஒரு செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து போலீசாரிடம் பத்திரிகையாளர்கள் இது பற்றிக் கேட்டுள்ளனர். போலீசார், தாங்கள் அந்த வீடியோவை ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் இந்த தாக்குதலை நடத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
[youtube https://www.youtube.com/watch?v=O0Bru2xgz-k]