சென்னை:
மிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் இந்திய உணவு கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் அறுவடை செய்தால் வழக்கமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் புதிய விலைக்கு கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். 2023-24ஆம் ஆண்டிலும் செப்டம்பர் 1 ஆம் தேதியே நெல்கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சீசனில் 41.58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூலை 5ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயலிடம் வலியுறுத்தி இருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.