d-1-1
“அவசரம்… “ என்ற குறிப்புடன், நமது பர்சனல் வாட்ஸ்அப் எண்ணுக்கு கட்டுரையாவகவே அனுப்பிவிட்டார் நியூஸ்பாண்ட்.
அவர் அனுப்பிய கட்டுரை:
தமிழக நிதியமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு, ஆட்சி மேலிடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து  அவர் தொடர்பான வதந்திகள் பரவியபடியே இருக்கின்றன.
சமீப காலம் வரை, மூத்த அமைச்சர்கள், ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஐவர்  குழுவிடம் கட்சி மற்றும் நிர்வாக விசயங்கள் குறித்து ஆலோசிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த ஐவர் அணியில், ஓ.பன்னீர்செல்வம் தவிர,  நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் அனுமதி இல்லாமல், கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் எதுவும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டது. இவர்களில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவரை முதல்வர் சில காலம் ஒதுக்கி வைத்ததாகவும் தகவல் பரவியது.   பிறகு, பழையபடி அவர் முக்கியத்துவம் பெற்றார்.
இந்த நிலையில், பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் மற்றும் பழனியப்பன் ஆகிய மூவரும், கட்சி பதவிகள் வழங்கவும், சட்டசபை தேர்தலில், பணம் வாங்கிக் கொண்டு, ‘சீட்’ கொடுக்க முயன்றதாகவும் பல தரப்பில் இருந்தும் புகார்கள் கிளம்பின. இதையடுத்து அவர்களது நடவடிக்கைகளை உளவுத்துறை கண்காணிக்க  ஆரம்பித்தது ஆட்சி மேலிடம். குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரியவர  , ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் வகித்து வந்த கட்சி பொறுப்புகளை பறித்தது தலைமை.
a
இந்த நிலையில்தான், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அமைச்சர் பங்களாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும்; சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் சமூகவலைதளங்களில்  தகவல்கள் பரவின. அல்லது பரப்பப்பட்டன.
தென்மாவட்டங்களில் இருந்து கிளம்பிய, ‘வாட்ஸ் ஆப்’  தகவல்கள், , வேறொரு தகவலை(!) பரப்பின.  தேனி மாவட்டத்தில், அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான தோப்பில் உள்ள பங்களா ஒன்றில், ஓ.பி.எஸ். சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்பதுதான் அந்த தகவல்(!).
பன்னீர்செல்வம் ஆதரவாளர்களோ, “பன்னீர்செல்வத்துக்கு, ஆட்சி மேலிடத்தில் சிக்கல் என்றதும், அவரது அரசியல் எதிரிகள் பலவித பொய்ச்செய்திகளை பரபப்ப ஆரம்பித்துவிட்டனர்.. சென்னையில் உள்ள தனது அமைச்சர் இல்லத்தில் தான்  இருக்கிறார்” என்றனர்.
ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஐவர் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூடிப் பேசியதாகவும். அதே ஓட்டலில் தொடர்ந்து ஓ.பி.எஸ். தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் அணியினரிடம் ரெய்ட் நடந்தது எனவும் பெரும் பணம் மேலிடத்தால் கைப்பற்றப்பட்டது எனவும் தகவல் பரவியது.
தன்னைப் பற்றி இத்தனை விதமான செய்திகள் பரவி, பலரும் அதிர்ச்சி அடைந்தபோதும்.. எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் வழக்கம்போலவே இருக்கிறார் ஓ.பி.எஸ்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமானவர்கள் “அவரது தாயார் உடல் நலம் குன்றிய நிலையில் கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைச் சென்று பார்த்த ஓ.பி.எஸ். இன்று (18.03.16 வெள்ளி) காலை சென்னை திரும்பினார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கியவர் நேராக தனது அமைச்சர் இல்லத்துக்குச் சென்றார். அங்கிருந்து காலை 10.30 மணிக்கு வெளியில் கிளம்பினார்.” என்கிறார்கள்.
அ.தி.மு.க. மற்றும் கோட்ட வட்டாரத்தில், “ஓ.பி.எஸ். உட்பட 14 அமைச்சர்களுக்கு இன்று காலை தோட்டத்துக்கு வரும்படி உத்தரவு வந்தது. அதன்படி அனைவரும் போயஸ் கார்டன் சென்றுள்ளனர். அங்கு பலவித விசாரணைகள் நடந்துகொண்டிருக்கின்றன. விசாரணை மேற்கொள்வது மேலிடமான ஜெயலலிதாதான். ஆனால் அவர் நேரடியாக இவர்களை விசாரிக்கவில்லை.  வீடியோ கான்ப்ரன்ஸில் விசாரணை நடக்கிறது. இறுதியில் ஓ.பி.எஸ்ஸிடமிருந்தும் இன்னும் சில அமைச்சர்களிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் பெறப்படலாம்” என்கின்றன.
ஆட்சியில் வெளிப்படத்தன்மை  என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் அ.தி.மு.க. அமைச்சரவை மாற்றப்படும்போது ஒருமுறைகூட அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை.  அமைச்சரவையில் முக்கியமான துறைகளை வைத்துள்ள ஒருவரைப் பற்றி அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையிலும் எந்தவித அறிக்கையும் அரசிடமிருந்து வரவில்லை.
இப்படி மூடுமந்திரமாக நிர்வாகம் தொடர்ந்தால் பல்வேறு விதமான தகவல்கள் பரவத்தான் செய்யும். இதை தங்களது ஆட்சியின் கடைசிக்காலத்திலாவது ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.