nassar-sarathtt

 

நாளை நடிகர் சங்கத் தேர்தல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சரத் மற்றும் விஷால் அணி பரபரப்பாக ஓட்டுவேட்டையாடி வருகிறார்கள். அதோடு ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை வீசுவதோடு, பரஸ்பரம் பாதுகாப்பு கோரி காவல்துறையிலும் முறையிட்டுள்ளார்கள்.

நாளை (18-ந்தேதி)  சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், தேர்தல் ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க அனுமதி இல்லை.

வாக்காளர்களும், வேட்பாளர்களும் அடையாள அட்டையுடன் வரவேண்டும், அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்தலில் 60 பேர் போட்டியிடுவதால், ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்ட் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

வெளியூர்களில் இருந்து ஓட்டுப்போட வருபவர்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்படும். அடையாள அட்டைகளை காண்பித்து அவர்கள் வாக்களிக்கலாம்.

ஓட்டுப்பதிவு 18-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடையும். மாலை 5 மணிக்கு மேல் ஓட்டுப்போட அனுமதி இல்லை.

வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில், செல்போன்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது.

வாக்குப் பெட்டிகள் ஓட்டுப்பதிவுக்கு முன் ஏஜெண்டுகளிடம் திறந்து காண்பிக்கப்பட்டு பின்னர் ‘சீல்’ வைக்கப்படும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் முன்னிலையில் தபால் ஓட்டுப்பெட்டி திறந்து எண்ணப்படும். அதன் பிறகு வாக்குச்சாவடியில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும்.

வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் வேட்பாளர்கள் மற்றும் ஏஜெண்டுகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். வாக்குகள் எண்ணிக்கை வீடியோவில் பதிவு செய்யப்படும். திரையிலும் அவை காண்பிக்கப்படும். ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்ததும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

–   இவ்வாறு தேர்தல் அதிகாரி பத்மநாபன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.