kk
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்றுவதைப் பற்றிப் பேசுவதற்காகத் தொடர்ச்சியாக முயற்சி செய்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே இயலவில்லை என்று குறிப்பாகச் சுட்டிக்காட்டி, மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் அவர்களும், பொன். ராதாகிருஷ்ணன் அவர்களும் வெளிப்படையாகக் கடுமையாகக் குற்றஞ்சாட்டி கருத்துகளை தெரிவித்த பிறகும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேரடியாக அதற்கு எந்தவிதமான பதிலும் கூறாமல், இரண்டு அமைச்சர்கள் ஏதோ பதில் கூற வேண்டுமென்பதற்காக மழுப்பலாக அறிக்கை கொடுத்தார்கள்.
தற்போது மற்றொரு மத்திய அமைச்சரான ஜவடேகர் அவர்கள் தமிழக அரசின் மீதும், முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகச் சுமத்தியிருக்கிறார். குறிப்பாக அவர் கூறும்போது, “மின் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடு வோருக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலனில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வுக்கு அக்கறை இல்லை” என்று தெரிவித்திருப்பது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு அல்ல; தமிழக அரசின் மீது நேரடியாகவே சாட்டியுள்ள குற்றச்சாட்டு. இதற்கு முதல்வர் ஜெயலலிதா உரிய பதில் கூறியே ஆக வேண்டும்; மத்திய அமைச்சர்களின் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தவோ, நாட்டு மக்களுக்கு விளக்கமளிப்பதைத் தவிர்த்திடவோ கூடாது.
மத்திய அமைச்சர் மேலும் கூறும்போது, “மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு தொடர்பாக அதைச் சுற்றியுள்ள தமிழகம் உள்பட 7 மாநிலங்களின் அறிக்கை கேட்கப்பட்டது. இதில் 6 மாநிலங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன. ஆனால் தமிழக அரசு மட்டும் இதுவரை எந்தவிதமான அறிக்கையும், பதிலும் அளிக்கவில்லை. நான் நுhற்றுக்கும் மேற்பட்ட முறை தமிழக முதல்வரைச் சந்திக்க முயன்றும், சந்திக்க முடியவில்லை” என்றெல்லாம் தெரிவித்திருப்பது சாதாரணமான குற்றச்சாட்டு அல்ல; தமிழக அரசின் மீதும், முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் தொடுக்கப்பட்டிருக்கும் மிகக் கடுமையான குற்றச்சாட்டு.
மத்திய அமைச்சர் ஜவடேகர் தனது பேட்டியில் தொடர்ந்து கூறும்போது, “தமிழக மின் வாரியத்துக்கு கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின் திருட்டு அதிகரித்து வருகிறது. அப்படி இருந்தும் தமிழகத்தில் மின்சாரத் துறையை நட்டத்திலிருந்து மீட்கவும், வருவாயை அதிகரிக்கவும் உதவும் மத்திய அரசின் “உதய்” எனும் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு முன் வரவில்லை. இத்திட்டத்தைப் பின்பற்றும் மற்ற மாநிலங்கள் நல்ல பலனைப் பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களில் செயல்படுத்தியதன் மூலம் 1.80 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், தமிழக அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. நியாயமான நுகர்வோர் பயன் பெறுவதைத் தமிழக அரசு விரும்பவில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் மத்திய அமைச்சர் கூறும்போது, “மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு 100 ரூபாய் விலையில் எல்.இ.டி. பல்புகளை வழங்குகிறது. அப்படி இருந்தும் தமிழக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக வெளி மார்க்கெட்டில் எல்.இ.டி. பல்புகளைத் தமிழக அரசு வாங்கி வருகிறது. இதிலிருந்து தமிழக அரசு அதிக விலைக்கு விற்பவர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது என்பது நிரூபணமாகியுள்ளது” என்றும் ஆதார பூர்வமாக தமிழக அரசின் மீது ஊழல் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
இன்று சில ஆங்கில நாளேடுகளில் வந்துள்ள செய்தியின்படி, ஒரு எல்.இ.டி. பல்பு தற்போது ரூ. 54.90 எனும் அளவுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது என்று மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்திருக்கிறார். அதன்படிப் பார்த்தால், அதிமுக அரசு எல்.இ.டி. பல்புகள் வாங்குவதில் பின்பற்றிய முறை கேடான நடைமுறைகளின் காரணமாக அரசுக்குப் பல நுhறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது புலப்படும்.
எல்.இ.டி. பல்புகளை பற்றி விவரம் கூற வேண்டுமேயானால், அ.தி.மு.க. ஆட்சியில், முதலமைச்சர் ஜெயலலிதா 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், “2012-13ஆம் ஆண்டில், பரிசோதனை முறையில் 9 மாநகராட்சிகள், திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களில் உள்ள 35 நகராட்சி கள், 101 பேரூராட்சிகளில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சிறப்புக் குழுக்கள் அமைக்கப்படும். டெண்டர் விடப் பட்டு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படும்” என்று அறிவித்தார்.
இந்தத் திட்டம் பற்றி ஜுனியர் விகடன் எழுதும்போது, “2012இல் வெளியான இந்த அறிவிப்பு காகிதத்தில் மட்டும் இருந்தது. இந்தியாவில் பல மாநிலங்கள் மத்திய அரசு கொடுத்த மானியத்தைப் பயன்படுத்தி எல்.இ.டி. பல்புகளுக்கு மாறிக் கொண்டிருந்த போது, தமிழகம் துhங்கிக் கொண்டிருந்தது. மேலும் கடுமையான மின் தட்டுப்பாட்டைச் சமாளிக்க முடியாமல் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கிக் கொண்டிருந்தது. மத்திய அரசின் சார்பு மின் நிறுவனமான இ.இ.எஸ்.எல். “நாங்கள் குறைந்த விலைக்குக் கொடுக்கும் எல்.இ.டி. பல்புகளை வாங்குங்கள்” என்று தொடர்ந்து தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி வந்தது. தமிழக அரசிடம் இருந்து அதற்குப் பதில் இல்லை. இ.இ.எஸ்.எல். நிறுவன அதிகாரிகளால் தமிழக முதலமைச்சர், மின் துறை அமைச்சர், மின் வாரிய அதிகாரிகள் என்று எவரையும் சந்திக்க முடிய வில்லை” என்று மத்திய அமைச்சர்கள் அல்ல, தமிழகத்தில் வெளி வரும் “ஜுனியர் விகடன்” அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றியும், எல்.இ.டி. பல்புகள் வாங்குவதில் நடந்த ஊழல் பற்றியும் எழுதியிருந்தது.
13-2-2016 அன்று சென்னை மாநகராட்சி “அம்மாவின் கனவுத் திட்டம்” நிறைவேற்றப்படுகிறது; இனி மின்சாரம் மிச்சமாகும்” என்று அறிவித்து, சென்னையில் உள்ள தெருவிளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி. பல்புகளாக மாற்றத் தொடங்கியது. ஆனால் சென்னை மாநகராட்சி எல்.இ.டி. பல்புகளைப் பொருத்தியதில், விதிமுறை கள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அதுபற்றி சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் தம்பி மா. சுப்பிரமணியன் கூறும்போது, “147 கோடி ரூபாய்ச் செலவில் செய்யப்படும் ஒரு திட்டம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், நேரடியாக மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டு, தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க் கட்சி உறுப்பினர்களை யெல்லாம் வெளியேற்றி விட்டு, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மட்டும் இருந்த போது, அது நிறைவேற்றப்பட்டதாக அறிவித்திருக்கிறார்கள்.
இப்படி செய்து, 30 ஆயிரம் தெரு விளக்குகளை எல்.இ.டி. பல்பு களாக மாற்றியிருக்கிறார்கள். ஆனால் விளக்குகள் எங்கிருந்து வந்தன? யாரிடம் கொள்முதல் செய்யப்பட்டன? அதற்கு டெண்டர் எப்போது விடப் பட்டது? எந்தெந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டன என்பது மர்மமாகவே இருக்கிறது. இதே அடிப்படையில் தமிழகம் முழுவதிலும் உள்ளாட்சி அமைப்பு களில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 1 இலட்சத்து 10 ஆயிரம் தெரு விளக்குகளில் 30 ஆயிரம் தெரு விளக்குகளை எல்.இ.டி. பல்புகளாக மாற்றியதில் மட்டுமே 145 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றததாகக் கூறப்படுகிறது. நியாயமாக மத்திய அரசிடமிருந்து பல்புகளை வாங்கிப் பொருத்தியிருந்தால் வெறும் 25 கோடி ரூபாயில் முடிந் திருக்கும். தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 9 மாநகராட்சிகள், 35 நகராட்சிகள், 101 பேரூராட்சிகள் என 35 இலட்சம் எல்.இ.டி. பல்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கணக்குச் சொல்கிறது. அப்படியானால் அதில் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றிருக்கலாம்” என்றெல்லாம் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.
இவ்வாறு மத்திய அமைச்சர்களாலும், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் பத்திரிகா தர்மத்தைக் காப்பாற்றி வரும் சில ஏடுகளாலும், மின்சாரத் துறை குறித்து மட்டும் அ.தி.மு.க. அரசு மீது இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரங்களோடு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
தன் மீதும், தமிழக அரசின் மீதும் சாட்டப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கூற வேண்டிய முதல் அமைச்சர் ஜெயலலிதா, அவரிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்க்கும் மக்கள் மன்றத்தின் முன் என்ன பதில் கூறப் போகிறார்? அலட்சியம், ஆணவம், மக்கள் நலனில் அக்கறையின்மை ஆகியவற்றின் காரணமாக, மத்திய அமைச்சர்களைச் சந்திக்கவே நேரம் கொடுக்க முன்வராத முதல் அமைச்சர் ஜெயலலிதா, பொதுத் தேர்தல் வரவிருக்கின்ற இந்த முக்கியமான நேரத்திலாவது விழித்துக் கொண்டு, அவருடைய அமைச்சர்களை விட்டு குறை சொல்பவர்களை நாராசமாக திட்டாமல், நாகரிகமான முறையில் உரிய பதிலளிக்க முன் வரத் தயாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.