டில்லி
குங்குமம், சாந்து ஆகியவைகளுக்கு அளித்தது போல் நாப்கினுக்கு ஏன் வரிவிலக்கு அளிக்கவில்லை என அரசை டில்லி உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது
டில்லியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஜர்மினா இஸ்ரார் கான் என்பவர் டில்லி உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு மனு ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் சானிடரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப் பட்டது.
விசாரணையின் போது அரசு தரப்பில் வாதாடிய சஞ்சிவ் நரூலா, ”நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டால் விலை உயர்வு ஏற்படும். வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு தாங்கள் செலுத்திய ஜி எஸ் டியை திரும்பப் பெறமுடியாது. அதனால் உள்நாட்டில் தயாரிக்கப் படும் நாப்கின்கள் விலை அதிகமாகும். இதை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் ஜி எஸ் டி 12% ஆக இருப்பதால், அதை திரும்பப் பெற இயலாத உற்பத்தியாளர்கள் அதை விலையில் ஏற்றி விடுவார்கள்” என வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த டில்லி உயர்நீதி மன்ற அமர்வு அரசின் இந்தப் போக்கை வன்மையாக கண்டித்துள்ளது. அமர்வு “சாந்து, குங்குமம் போன்ற பொருட்களுக்கு ஜி எஸ் டி யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சானிடரி நாப்கினுக்கு ஏன் அளிக்கவில்லை? இது குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்துடன் ஜி எஸ் டி கவுன்சில் கலந்துரையாடியதாக தெரியவில்லை. மேலும் தேவைப்பட்டால் நாப்கின் தயாரிப்பாளர்களுக்கு மூலப் பொருட்களில் ஜி எஸ் டி விலக்கு அளிப்பது பற்றி ஆராய வேண்டும். ஜி எஸ் டி கவுன்சிலில் ஒரு பெண் உறுப்பினராவது இருந்திருக்க வேண்டும்.” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தற்போது ஜி எஸ் டியில் இருந்து சாந்து, குங்குமம், கண்மை, கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் வளையல்கள், பெண்கள் உபயோகப் படுத்தும் பூஜை பொருட்கள், ஆணுறை போன்றவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பெண்களுக்கு அத்தியாவசியமான சானிடரி நாப்கின்கள் பொம்மைகள், மொபைல்கள் ஆகியவைகளின் வரிசையில் சேர்க்கப்பட்டு 12% வரி விதிக்கப்பட்டுள்ளது.