நடிகர் சங்கம்

முட்டாள் மக்களும், சுயநல ஊடகங்களும்! :  பாவைமதி

இன்று முதல் தமிழ்நாட்டில் பாலாறும்,தேனாறும் கரைப்புரண்டு ஓடும்.நாம் எல்லாம் இனி நிம்மதியாக காலம் தள்ளலாம்.  ஒரு மாதத்தில் தமிழ்நாடு சிங்கப்பூராகிவிடும். இதுவரை அரசியல்வாதிகளின் அரவணைப்பில் இருந்த நாம் இனி நடிகர்களின் ஒற்றுமை, வளர்ச்சியைப் பார்த்து புளாங்கிதம் அடையலாம்.

ஆமாம்…  நேற்று நம் வீட்டு ஒளி,ஒலி பெட்டிகளில் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டிருந்த காட்சிகளை பார்க்கும் போது இப்படிதான் தோன்றியது.

மக்களை குஷிப்படுத்த இருக்கிற ஆயிரம் பொழுதுபோக்குகளில் சினிமாவும் ஒன்று. நல்லதும்,அல்லாதும் சேர்ந்த கலவை அது.  அந்தத் துறையின் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் ஒரு சின்ன தேர்தல்.. அவ்வளவே!

ஒருமாதமாக அதற்காக நடக்கும் பிரச்சாரம், அறிக்கை, சவடால், சபதம், களப்பணி, நடைப்பயணம் என ஊடகங்கள் அவர்களைப் பற்றிய செய்திகளை போட்டி போட்டிக் கொண்டு வெளியிட்டு நம்மை முட்டாள்கள் ஆக்கி கொண்டிருந்தன.  வேறு செய்திகளையோ, நிகழ்ச்சிகளையோ வைத்து பார்க்கும் அளவிற்கு நமக்கு அறிவோ,தேடுதலோ இல்லை என்பதும் ஒத்துக் கொள்ளக் கூடிய ஒன்று

நேற்று காலை…  அந்த தேர்தல்  நடக்கும் இடத்துக்கு அருகே வேறு ஒரு வேலையாக செல்லவேண்டியிருந்தது. அங்கு  நான்  கண்டக்காட்சி…. ஆஹா..!  நம் ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அந்த பகுதியையே ஒருவழி பண்ணிக்கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் அவரவர் வீட்டில் ஆயிரம் வேலைகள் இருக்கும் அதையெல்லாம் விட்டு விட்டு இங்கு வந்து நடிகர்களைப் பார்க்க காத்திருந்தனர்.

ஒரு வாலிபரை நெருங்கி, “ஏன் தம்பி நீ கூட ஒட்டு போடப் போறியா..? பரவாயில்லையே.. “ என்றதற்கு அவன், “இல்லையில்லை…  என் உயிர் தலைவர் வருவாரில்ல… அவரை பார்க்கத்தான் வந்தேன்!”  என்று கூறியவாறு ஒருவித உன்மத்த நிலையில் உலாத்திக்கொண்டிருந்தான் அந்த வருங்கால இந்தியா.

அட பாவி மக்கா…. இங்கு வந்து ஓட்டு போடறதற்கு கூட உன் தலைவன் கால்ஷீட் கொடுத்து காசு பார்த்திருப்பார்டா.. இது புரியாமல் உன் வேலையெல்லாம் விட்டுட்டு வந்திருக்கியே என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் இதையெல்லாம் சொன்னால் எல்லாம் அவர்களுக்கு புத்தியில் ஏறாது. ஏனென்றால்,  நடிகை மனோரமா  இறந்த போது நடிகர் அஜித்குமார் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. ஒரு துக்கநிகழ்ச்சிக்கு வந்த ஒரு நடிகனை வாசல் வழியே வந்து வாசல் வழியே திரும்பி போகக் கூட நம் ஆட்கள் விடவில்லையே!

இந்த நடிகர் சங்க தேர்தலில் மொத்தமே சில ஆயிரம் வாக்காளர்கள்தான்.  பாதுகாப்புக்கு வந்த காவலர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல்!

நாட்டில் மிக முக்கிய சம்பவத்திற்கு நம் அரசு அளித்த பாதுகாப்பு இது.

ஆனால் இத்தனை பாதுகாப்பு இருந்தும் ஒரு நிமிடத்திற்கு ஒரு செய்தி வந்தவண்ணம் இருந்தது. நடிகர் தாக்கப்பட்டார், ஒரே தள்ளுமுள்ளு என்று.

நாள் முழுதும் தமிழ்நாட்டு மக்களை வெகு முட்டாள்களாய் வைத்திருந்ததில் நடிகர்களின் பங்கை விட நம் ஊடகங்களின் அளப்பரிய பங்குதான் மிக மிக அதிகம். நல்லவேளை எந்த ஒரு ரசிகரும்  பெட்ரோல் ஊற்றிக் கொண்டு கொளுத்திக்கொள்ளவில்லை.

அந்த தொலைக்காட்சி நிருபர்களை நினைத்தால் பரிதாபம் ஒருபக்கம்.. கோபம் ஒருபக்கம் வருகிறது.

பாவைமதி
பாவைமதி

“நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள், அடுத்து என்ன செய்யப் போறீங்க” “யாரையெல்லாம் எதிர்த்து அறிக்கை விடப் போறீங்க” “கமல் என்ன சொன்னார்” “ரஜினியின் வேண்டுகோளிற்கு என்ன செய்யப் போறீங்க” “கொஞ்சம் கட்டிப்பிடித்து போஸ் கொடுங்களேன் “…

அடக் கடவுளே!

தேர்தல் முடிந்ததும், பட்டாசு, மாலை, ஆட்டம் என அந்த நள்ளிரவிலும் நம் ரசிகர்களின் அன்பு மழையில் நடிகர்கள் நமுத்துப்போய்க்கொண்டிருந்தார்கள்.

முடிவாக அவர்கள் இந்த நல்லுலகத்திற்கு சொன்ன செய்தி..

“நாங்கள் ஒற்றுமையாக இருப்போம். ஒன்றாய் நடிப்போம்.அனைத்து நடிகர்களுக்கும் நல்லது செய்வோம்”  என்பதே.

கவனிக்க….    சமுதாயத்திற்கு எதுவும் செய்யப்போவதாக ஒரு வார்த்தைகூட  அவர்கள் சொல்லலை. குறைந்தபட்சம், “மக்களுக்காக  நல்ல படங்களில் மட்டும்தான் நடிப்போம். ஆபாசம் வன்முறையான படங்களில் நடிக்க மாட்டோம்”  என்றுக் கூட சொல்லை.

”சொல்ல வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஏனென்றால் இது மக்களுக்காக, மக்களால் நடத்தப்பட்ட தேர்தல் இல்லை”  என்று இதற்கு பதில் வரும்.  நானும் இதை ஒப்புக்கொள்கிறேன்…   பிறகு ஏன் ரசிகர்களும் ஊடகங்களும் ஏன் இந்தத் தேர்தலுக்கு இத்தனை முகக்கியத்துவம் தரவேண்டும்?

தமிழ் ஊடகங்கள் மந்தையில் ஆடுகளை சேர்க்கும் பணியை சிறப்பாகவே செய்து வருகின்றன. நாம் இன்னும் ஆட்டுமந்தையாகதான் இருக்கிறோம்.

தயவுசெய்து விழித்துக் கொள்ளுங்கள் மக்களே…   நமக்கு ஆயிரம் பிரச்னைகள், கடமைகள், வேலைகள் காத்துக் கொண்டிருக்கின்றன!