அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
டிகேஎஸ் இளங்கோவனின் கருத்துக்கள் கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடில்லை என கருணாநிதி முழநீளத்திற்கு அறிக்கைவிட்டாலும், இன்னமும் அவர் வி.சி.கவோ அல்லது மனித நேய மக்கள் கட்சியோ எங்கள் கூட்டணியில் தொடரும் என்று சூசகமாகக் கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ கடந்த இரண்டாண்டுகளாகவே திருமாவை சுத்தலிலேயே விட்டுவைத்திருக்கிறார். பெரியார் சுடர் அந்தச் சுடர் இந்தச் சுடர் என்றெல்லாம் பட்டம் கொடுத்து, யார் மைக்கை நீட்டினாலும் கலைஞரே தமிழினத்தின் தலைவர் என்று முழங்கினாலும் அவரோ அவரது திருமகனோ மசிவதாக இல்லை. எப்படி விடுதலைச் சிறுத்தைகளைக் கழற்றிவிடுவது என்பதிலேயே இருவருமே குறியாயிருக்கின்றனர். பார்க்கும் செய்தியாளர்களிடமெல்லாம் இவர் சரிப்படமாட்டார் என்று விடாமல் சொல்லுகின்றனர், திருமாவின் செவிகளுக்குப் போய்ச் சேரட்டும் என்று. ஊஹூம் தமிழக அம்பேத்கார் கேட்டால்தானே. திண்ணையைக் காலி செய்ய மறுக்கிறார். எனவேயே இளங்கோவன் வாயிலாக முதற்கட்ட அறிவிப்பு.
சரி என்ன பிரச்சினை கலைஞருக்கோ, ஸ்டாலினுக்கோ? ராஜ விசுவாசம் காட்டத் தவறுவதில்லை. குழைய மறுப்பதில்லை. தவறியும் விமர்சனம் செய்வதில்லை. விடுதலைச் சிறுத்தைகளுக்கென உறுதியானதொரு வாக்கு வங்கியும் உள்ளது. அப்புறமும் ஏன் தயக்கம்? வேறொன்றுமில்லை விடுதலைச் சிறுத்தைகளை பக்கத்தில் வைத்துக்கொண்டால், அரசியல் அதிகாரம் தங்களுடையதே, வேறு யாருடனும் பகிரக்கூடாது என முரண்டுபிடிக்கும் இடை நிலை சாதிகளின் வாக்கு எதிரணிக்கு செல்லும் சாத்தியம் இருக்கிறதே. கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியுற்றதற்கு ஒரு காரணம் திருமாவளவனுடன் கூட்டணி வைத்துக்கொண்டதுதான் என தந்தையும் தனயனும் நினைக்கின்றனராம், குறிப்பாக ஸ்டாலின்.
விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல, ஓரிரு ஆண்டுகளாக திமுகவுடன் உறவு பாராட்டும் மனித நேய மக்கள் கட்சிக்கும் ‘கெட் அவுட்’தான். விசிகவால் மற்ற இடைநிலை சாதியினர் வாக்குக்களை இழக்க நேரிடலாம், ஜவாஹிருல்லா பாயுடன் கூட்டணி என்றால் நடுத்தர வர்க்க, மதப் பிடிப்பு சற்று கூடுதலாக உள்ள இந்துக்களின் வாக்குக்களை இழக்க நேரிடலாம். எனவே இருவரையும் பக்கத்திலேயே சேர்ப்பதில்லை என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சரி அப்படிச் செய்தால் கருணாநிதியின் இமேஜ், தலித்துக்களின் சம்பந்தி, சிறுபான்மையினரின் பாதுகாவலன் என்ற பிரச்சாரமெல்லாம் பம்மாத்தாகாதா? அட போங்கப்பா போரிலும், காதலிலும் தேர்தலிலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறியாகிவிட்டதே.
ஏறத்தாழ முக்குலத்தோர் பிடியில் இருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக, தலித் விரோத நிலைப்பாடுகளையே பொதுவாக எடுத்து வருகிறது. தவிரவும் கோயில் கோயிலாக படி ஏறி இறங்கி, இரவு பகலாக யாகத் தீ வளர்த்து ஒரு சாமி விடாமல் எல்லோரிடமும் வழக்குக்களிலிருந்து காப்பாற்று என ஒவ்வொரு நொடியும் வேண்டிக்கொண்டிருக்கும் ஜெ எப்போதுமே பாரதீய ஜனதாவின் இயற்கையான கூட்டாளி. 2002 கொடுமைகள் போது கூட மோடிக்கு ஆதரவு தெரிவித்தவர். அவரும் இங்கு வந்தால் பிரதமர் என்றெல்லாம் ப்ரெஸ்டிஜ் பார்க்காமல் அம்மையாரை வீடு சென்று சந்திக்கிறார். ஆக பாஜக கூட்டணி உள்ளதோ இல்லையோ, அ இஅ திமுக மீண்டும் ஆட்சிக்கு வருமானால் அது முஸ்லீம் விரோத அரசாகவே இருக்கும். எதைப் பற்றியுமே அக்கறைப் படாது.
லட்சக்கணக்கான தொண்டர்களின் குருதியில் கட்டப்பட்ட கட்சியினை தலைவரின் மகன் என்ற ஒரே தகுதியில் தன் பிடியில் வைத்துக்கொண்டு, முதல்வரும் ஆகவேண்டும் எனக் கனவு காணும் ஸ்டாலினுக்கு வேண்டுமானால் அத்தகைய பாரதூர சமூக விளைவுகள் ஒரு பொருட்டல்ல என்றாலும் 90 வயதைத் தாண்டிவிட்ட தமிழக சாணக்கியர் பெரியாரின் நேரடி சீடர் முத்துவேலர் கருணாநிதிக்கு உறுத்தவேண்டாமா? ஏதேனும் ஒரு கட்டத்திலாவது தான் துவங்கிய இடம் எது, என்னவெல்லாம் பேசியிருக்கிறோம், தமிழ்ச் சமூகம் எத்திசையில் பயணித்திருக்கவேண்டும், எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியதில் தன் பங்கு எவ்வளவு என்றெல்லாம் ஆத்ம பரிசோதனை செய்து, இப்போதாவது ஓட்டுப் பொறுக்கும் அரசியலிலிருந்து தடம் மாறி சற்றேனும் சமூகப் பார்வையினை கருணாநிதி மீண்டும் பெறவேண்டும்.
1990ல் திருப்புமுனை மாநாடு, வழி தவறிவிட்டோம் மீண்டும் திராவிட இயக்க நோக்கங்களுக்காகப் பாடுபடுவோம் என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்தார், என்ன நடந்தது..? நான்கைந்து அப்பாவி பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது அல்லது குடுமி வெட்டப்பட்டது… அவ்வளவுதான், அந்த அருவருக்கத்தக்க அந்த பிராமண எதிர்ப்பு கூட சில வாரங்களிலேயே முடிந்துபோனது.
அண்மையில் கூட மீண்டும் திருப்புமுனை என கதையளந்தார். பழைய வீராப்பு கூட இல்லை. மேடம் எப்போது நகருவார் மோடியுடன் கைகோர்க்கலாம் என்றல்லவா கனவு காண்கிறார்.
ஆனாலும் வேறுவழியில்லை சமூக நீதி ஓரளவேனும் நிலவவேண்டுமானால் சிறுபான்மையினரை, தலித்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஆட்சிக்கட்டிலருகேயாவது நிற்கவேண்டும். திமுக ஆட்சியிலிருந்தால்தான் அப்படி நிற்பதில் கூட பொருளிருக்கும்.
கலைஞர் பெருமானே சற்று யோசியுங்கள் தமிழனின் பெயரால் நீங்கள் அடித்த கொள்ளைகள், செய்த கொடுமைகள் அனைத்தையும் கூட மன்னித்துவிடலாம், பாவப்பட்ட பகுதியினரை, பாதிக்கப்படும் பகுதியினரை நட்டாற்றில் விடாதீர்கள்.
மீறி இதே பாதையில்தான் நீங்கள் செல்வதாக இருந்தால் 2001ல் ஏகப்பட்ட சாதிக்கட்சிகளை கூட்டணி சேர்த்து இறுதியில் மண்ணைக்கவ்விய அந்த கதி மீண்டும் ஏற்படட்டும் என்று சபிக்கலாம்.
வேறென்ன செய்ய…?
– த.நா.கோபாலன் https://www.facebook.com/gopalant?fref=ts