kkk

சென்னை:

“தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் திமுக கள்ள மவுனம் காக்கிறது” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சட்டசபைத் தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்வதை திமுக தலைவர் கருணாநிதி விரும்பவில்லை” என்று கூறியிருந்தார்.

“அந்த பேட்டியில் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியது அவரது சொந்த கருத்து. திமுகவின் கருத்து அல்ல” என்று திமுக, அறிக்கை வெளியிட்டது.

இதற்கிடையே, “திமுகவுடன் கூட்டணி இல்லை” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். ஏற்கெனவே கடந்த ஜூலை மாதத்திலேயே, “திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இல்லை” என்று திருமாவளவன் அறிவித்தாலும், “திமுகவுடனான உறவு தொடர்கிறது” என்றும் கூறியிருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகரான வன்னியரசு தனது முகநூல் பக்கத்தில், திமுகவை கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.

அதில், “சேசாசலத்தில் தலித் மக்கள் தாக்கப்பட்டபோதும், திருமாவளவன் மீது பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய தாக்குதல் நடந்த போதும் திமுக கள்ள மவுனம் சாதித்தது. இப்படிப்பட்ட மக்கள் விரோத தலைமையோடு இருப்பதை விட விலகி விடுவதே நல்லது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“தொடரும் கேள்விகள்..!” என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த பதிவில் வன்னியரசு கூறியுள்ளதாவது:

vanniarasu“திமுக தலைமை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு கள்ள மவுனம் காத்துவந்தது.   விழுப்புரம் மாவட்டம் சேச சமுத்திரம் சேரியை சாதிய- சமூக விரோதிகள் சூறையாடிய போது  பல கட்சிகள் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தின.   ஆனால், திமுக தலைவர் இக்கொடூரத்தைக் கண்டித்து இதுவரை கண்டித்து அறிக்கை கொடுக்கவில்லை.  தமிழ்ச் சமூகத்தின் அங்கமான தாழ்த்தப்பட்ட சமூகம் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாவதை எப்படி பெரியாரியவாதியான கலைஞர் எப்படி பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. நடக்கும் அநீதிகளை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பது கூட அநீதிகளுக்கு துணை போவதல்லாமல் வேறென்ன?

அப்படி தான் திருவாரூர் மாவட்டம் வடசேரியில் விடுதலைச்சிறுத்தைகள் கொடி ஏற்றப்போன தலைவர் திருமாவளவன் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை  செய்ய முயற்சி நடந்தது.  இத்தகைய வன்முறையை எல்லோரும் கண்டித்தனர். கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தது இரண்டே இரண்டு கட்சிகள் தான். அவை திமுகவும் அதிமுகவும் தான்.

அம்மையாரின் ஆட்சியில் இந்த வன்முறை அரங்கேற்றம் நடந்திருப்பதால் ஜெயலலிதா கண்டிக்க வாய்ப்பில்லை. ஆனால், கலைஞர் அத்தகைய வன்முறையை கண்டித்து அறிக்கை கொடுக்காது போனது எதனால்? சாதி இந்துக்களுக்கு அச்சமா? அல்லது தலித் என்கிற இளக்காரமா?

ஒருமுறை ராமர் பாலம் தொடர்பான விவாதம் எழுந்த போது, ராமர் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் என்று கலைஞர் கேட்ட போது, வட இந்திய சாமியார் ஒருவர் கலைஞரின் நாக்கை அறுப்போம் என்று பேசிய போது உடனடியாக அந்த சாமியாரை கண்டித்து பெரும் போராட்டத்தை நடத்தியது விடுதலைச்சிறுத்தைகள் தான். அதே போல ஈழப்போர் நடந்த சமயத்தில் துரோகம் செய்த கலைஞரை தாங்கிபிடித்து 15 ஆண்டுகளாக திமுகவோடு பயணம் செய்த திருமாவளவன் அவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றதும் கள்ள மவுனம் காப்பது தான் தோழமையா?

அப்படிப்பட்ட மக்கள் விரோத தலைமையோடு இருப்பதை விட விலகி விடுவதே நல்லது. இப்படி பல கேள்விகள் சிறுத்தை தோழர்களிடம் எழுந்து கொண்டே இருக்கின்றன”  என்று தனது பதிவில் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

இதற்கு முந்தைய அவரது பதிவில், “கடந்த தேர்தல்களில் திமுக, அதிமுகவுடன் தேர்தலில் கூட்டணி வைத்து தங்களுடைய போர்க்குணத்தை சிறுத்தைகள் இழந்தது தான் மிச்சம். தேர்தல் புறக்கணிப்புக்கு முன் இருந்த அந்த கலக குணம் கூட்டணி தேர்தல்களில் கரைந்து போய் விட்டது. தமிழகத்தில் சேரிகள் கொளுத்தப்பட்ட போதும், இளவரசன், கோகுலராஜ் போன்ற சேரி இளைஞர்கள் சாதிமறுப்பு திருமணத்தை மேற்கொண்டதற்காக படுகொலை செய்யப்பட்டதற்காக வாய்மூடி கிடந்த கலைஞர் போன்றவர்களோடு இனியும் கூட்டணி வைப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது டெசோ என்கிற பெயரில் ஈழத்தமிழர்களை ஏமாற்றுவது போன்றது” என்றும் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பிரமுகரான வன்னியரசு, திருமாவளவனின் அனுமதி இன்றி இப்படி எழுதியிருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே திமுகவுடனான விடுதலை சிறுத்தைகள் உறவு முற்றிலுமாக அறுபட்டது என்பதே தற்போதைய நிலை.