என். சொக்கன்
தலைவர் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகிவிட்டார். அவருக்குப்பதிலாக துணைத்தலைவரோ இணைத்தலைவரோ உங்களைச் சந்திப்பார்கள்.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஆங்கிலத்தில் சொன்னால் சட்டென்று புரிந்துவிடும். துணைத்தலைவர் என்றால் assistant, இணைத்தலைவர் என்றால் additional.
Assistant என்றால் எடுபிடி என்று நினைத்துவிடக்கூடாது, தலைவரின் பணிகளுக்கு assist செய்பவர், உதவுபவர், துணைநிற்பவர், ஆகவே அவர் துணைத்தலைவர்.
Additional என்றால், கூடுதல் என்று பொருள், அதாவது, தலைவருக்கு இணையானவர், ஆகவே, அவர் இணைத்தலைவர்.
‘துணை’ என்ற சொல்லைக்கொண்டு ‘துணைவர்’, ‘துணைவன்’, ‘துணைவி’, ‘வாழ்க்கைத் துணை’ என்ற பதங்கள் உருவாக்கப்பட்டன, இதேபோல் ‘இணை’யிலிருந்து ‘இணையர்’ என்ற பதம் வந்திருக்கிறது, இவையெல்லாம் பெரும்பாலும் கணவன்/ மனைவி போன்ற உறவுகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், ‘துணை’யை அப்படி ஒருவட்டத்துக்குள் சுருக்கவேண்டியதில்லை. துணை ஆசிரியர், துணைப் பேராசிரியர், துணை வேந்தர், துணை முதல்வர், துணை ஜனாதிபதி, துணை ஆணையர், துணை ஆய்வாளர் என்று பல இடங்களில் இதனைப் பயன்படுத்துகிறோம்.
இதேபோல், ஆறுகளிலிருந்து உருவாகும் கிளைகளைத் ‘துணையாறுகள்’ என்பார்கள். எங்கேயாவது ஊருக்குச்செல்லும்போது உடன் வருபவரை ‘வழித்துணை’ என்பார்கள். வழக்கமான பாடத்தோடு கூடுதலாக வாசிக்கும் நூல்களைத் ‘துணைப்பாடம்’ என்பார்கள்.
திருக்குறளில் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ என்று ஓர் அதிகாரம் உண்டு, இந்த அழகிய சொற்றொடரின் பொருள், பெரியவர்களைத் துணையாகக்கொள்ளுதல்!
இந்தச் சொல்லைப் பயன்படுத்தும் ஓர் அழகிய பழமொழியும் உண்டு, ‘திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’. அதாவது, எந்தத்திசையில் செல்வது என்று தெரியாமல் திகைத்துநிற்பவர்களுக்கு, தெய்வம் கைகொடுத்து உதவும்!
கை கொடுக்கும் துணைமட்டுமல்ல, கால் கொடுக்கும் துணையும் உண்டு!
நீங்கள் ‘துணைக்கால்’ என்ற இனிய சொல்லைப் பயன்படுத்துவதுண்டா? ‘கா’ என்று எழுதும்போது, ‘க’க்கு அருகே உள்ள துணையெழுத்து இருக்கிறதே, அதைக் ‘கால்’ என்பார்கள், இன்றைக்கும் குழந்தைகளுக்குத் தமிழ் எழுதக் கற்றுத்தரும்போது, ‘க போட்டுப் பக்கத்துல கால் வாங்கணும்’ என்று சொல்கிறோம்.
‘கால்’ என்ற இந்தக் குறியீடு, ‘க’வைக் ‘கா’ என்று மாற்றி, அது சரியாகக் குறிப்பிடப்படத் துணைபுரிகிறது. ஆகவே, அதனைத் ‘துணைக்கால்’ என்பார்கள்!
(தொடரும்)