download

“அதிமுக அழைப்புக்காக காத்திருக்கிறேன்”  என்று  தமாகா மூத்த துணைத்தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

இது பற்றி அவர் கூறியதாவது:

“தே.மு.தி.க –  ம.ந.கூட்டணியில் தமாகா இணைந்தது  வாசன் தன்னிச்சையாக  எடுத்த முடிவு.
கட்சியில் உள்ள பெரும்பாலானோர் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். ஆனால் வாசன் எடுத்த முடிவு கொள்கைக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது. இந்த முடிவினால் நான் அதிர்ப்தியில் உள்ளேன். வாசன் என்னை அதிமுகவிடம் கூட்டணி தொடர்பாக பேச சொன்னார். மேலும் 8ஆம் தேதி வாசன் என்னை தொடர்புகொண்டு கூட்டணி தொடர்பாக முடிவு எடுத்துவிட்டோம் என்றார்.  மேலும் தமாகா தேமுதிக-ம.ந.கூவுடன் தான் இணைகிறது என்றார்.

இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் தமாகாவில் தான் உள்ளேன் கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு அதிமுகவின் அழைப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

இன்று எஸ்.ஆர்.பி ஜெயலலிதாவை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. தே.மு.தி.க. – ம.ந.கூட்டணியுடன் த.மா.கா. கூட்டணி வைத்தது எஸ்ஆர்.பி. மற்றும் ஞானசேகரன் ஆகியோருக்கு பிடிக்கவில்லை என்றும் அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் நேற்றே செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது எஸ்.ஆர்.பி. வெளிப்படையாக அறிவித்துவிட்டார். விரைவில் ஞானசேகரனும் தனது கருத்தை வெளிப்படையாக அறிவித்து ஜெயலலிதாவை சந்திப்பார் என்று தகவல்கள் உலவுகின்றன.