edu-chnschool
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மே மாதம் தேர்தல் நடந்தால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துக் கொண்டிருக்கும்.
இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ம் தேதி முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில் தேர்தலும், பொதுத் தேர்வும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வருவதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பெரும் இடையூறாக இருக்கும் என்ற கவலை எழுந்துள்ளது. தேர்தலுக் முன்பு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, தேர்தல் பணி பயிற்சி முகாம்கள், மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தல் பணி குறித்த ஆய்வு கூட்டங்கள் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்துதல், கோச்சிங் கிளாஸ் நடத்துதல் போன்ற பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். இதனால் தேர்ச்சி சதவீதம் பாதிக்குமோ என்று ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அதேபோல் மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதற்கு அரசியல் கட்சிகளின் மைக் செட் பிரச்சாரம் பெரும் இடையூறாக இருக்கும். ஊரே தேர்தல் திருவிழாவில் கலை கட்டி இருக்கும் போது மாணவர்களின் மன நிலை மாறி தேர்வு பாதிக்கும் நிலை உருவாகும். இதேபோல் பெற்றோரும் தங்களது பிள்ளைகளை நினைத்து கவலை அடைய நேரிடும் என்று கல்வியாளர் ஒருவர் தெரிவித்தார். அதனால் தமிழகத்தில் அரசு பொதுத் தேர்வுகள் முடிந்த பிறகு தேர்தல் தேதியை அறிவித்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.