maa
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், ’’மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும், பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. மதுவுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்களின் கோபாவேசம், ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராகப் பேரலையாகப் பரவி வருகிறது. ஆட்சியின் அஸ்தமன நேரத்தில்கூட மதுவுக்கு எதிராகப் போராடுவோர் மீது ஜெயலலிதா அடக்குமுறையை ஏவுகிறார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் மதுவால் சீரழிந்த தமிழகத்தின் நிலைமை குறித்தும், தமிழ்நாட்டின் பண்பாட்டு சீரழிவு, வளரும் தலைமுறையினர் பாதிக்கபடும் பேரவலம், சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மக்கள்அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, நிர்வாகக்குழு உறுப்பினர் காளியப்பன் மற்றும் டேவிட்ராஜ், சென்னை ஆனந்தியம்மாள், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், தனசேகரன் ஆகிய ஆறு பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ, 504 மற்றும் 505 (1)(b) ஆகிய பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த பாடகர் கோவன் அவர்கள், ‘மூடு டாஸ்மாக்கை மூடு என்ற’ பாடல்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய காரணத்தால் அவர் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தேசப் பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டது. தற்போது மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றுப் பேசியவர்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது போடப்பட்டுள்ள தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துதோடு, ஜெலலிதாவின் அதிகார ஆவணத் தர்பாருக்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் முடிவு கட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.