தொலைக்காட்சிகளில் தினம் தினம் எத்தனையோ விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் தொலைக்காட்சி விவாதங்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்த ஒரு சிறப்பான விவாதத்தை சத்தியம் தொலைக்காட்சி நடத்தியது. இதில் பங்குகொண்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன்காந்தி தெரிவித்த கருத்துக்கள் கவனிக்கத்தக்கவை.
அந்த நிகழ்ச்சியில் திருமுருகன் காந்தி தெரிவித்த கருத்துகள்:
 
a
“பெரும்பான்மையான முன்னனி தொலைக்காட்சியின் விவாதங்களில் இருக்கும் உள் அரசியல் குறித்து பேசும் அவசியம் இருந்தது. அது குறித்து பேசியதன் சிறுபகுதியை இங்கு பதிவிடுகிறேன்.
பொதுவாக விவாதம் என்பது அரசியல்கட்சி, அதிகாரவர்க்கம், இவர்கள் கொண்டுவரும் திட்டங்கள், கொள்கைகள் குறித்து ஏற்படும் சமூக, அரசியல், பொருளாதார தாக்கம் குறித்து விமர்ச பூர்வமாக நடப்பதே மக்களுக்கான விவாதம். அரசியல், அதிகாரம் இந்த இரண்டில் இல்லாமல் பொதுவெளியில் நின்று கேள்வி எழுப்புபவர்களின் குரலே மக்கள் குரலாகவோ, அல்லது, விமர்சனக்குரலாகவோ இருக்க முடியும்.
ஆனால் பெரும்பாலும் நாம் காண்பது, திமுக,அதிமுக, காங்கிரஸ், பாஜக பிரதிநிதிகளே விவாதங்களை ஆக்கிரமிக்கிறார்கள். இவர்களுடன் அதிகார வர்க்கத்தினை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பங்கேற்பார்கள். பிறகு சமூக ஆர்வலர் எனும் போர்வையில் திமுக, அதிமுக, பாஜக/ஆர்.எஸ்.எஸ்/இந்துத்துவ ஆதரவாளர்கள் விவாதத்தில் அமர்ந்திருப்பார்கள். இல்லையெனில் அரசின் கொள்கைகளை விமர்சனத்திற்குள்ளாக்காத மேம்போக்கான நபர்களை அமர்த்துகிறார்கள். அதாவது இந்த கூட்டணி எந்த இடத்திலும் அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ, அல்லது அரசின் கொள்கைகளையோ கேள்விக்குட்படுத்தாது. இவையல்லாத பொது விடயங்களை பட்டிமன்றம் போல பேசி எந்த கருத்தியல் முடிவும் இல்லாமல் நடத்தி முடிப்பார்கள். இது கவனமாக திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகம். இந்த வடிவமைப்பினை அரசே திட்டமிட்டு செய்கிறது. அல்லது அரசிற்கு இவர்கள் ஒருவகையில் உடன்படுகிறார்கள். மறுப்பவர்கள் நெருக்கடிக்குள்ளாகிறார்கள்.
இப்படியான போலி கூட்டணியை வைத்து ஆழமான விவாதத்தினை நடத்த முடியாத நெருக்கடியை விவாத நெறியாளர்கள் சந்திப்பதை கவனித்திருக்கிறேன்
காங்கிரஸ், பாஜக, திமுக பிரதிநிதிகள் கட்சியில் இருந்து வருவார்கள். அதிகாரவர்க்கத்தின் பிரதிநிதிகளாக முன்னாள் பத்திரிக்கையாளர்கள், முன்னாள் ராணுவ/போலீஸ் அதிகாரிகள் அமர்வார்கள். உதாரணமாக கர்னல் ஹரிஹரன், முராரி , ’தி இந்து’ ராதாகிருஷ்ணன், போன்றவர்கள்.
இதே போல இந்துத்துவ ஆதரவாளர்கள் சமூக ஆர்வளர்கள் எனும் போர்வையில் அமர்ந்திருப்பார்கள். உதாரணமாக சுமந்த்ராமன், பத்ரி , ஆடிட்டர் ராமமூர்த்தி, பானு கோம்ஸ் போன்றவர்கள்.
இதுவல்லாமல் அரசியல் கொள்கையற்ற ’ஞாநி’ போன்றவர்கள் கருத்து கந்தசாமியாக மாறுவார்.
அனைத்து விடயங்களுக்கும் இவர்கள் அழைக்கப்படுவார்கள், கருத்து சொல்வார்கள்.
ஆனால் அதே சமயம் அனைத்து சமூக-அரசியல் பிரச்சனைகளுக்கும் போராடும் கருத்தியல் பார்வையும் போராட்டமும் செய்யும் கோவை ராமகிருட்டினன், கொளத்தூர்மணி, மணியரசன், அரங்ககுணசேகரன், பொழிலன், பொன்னையன், திருநாவுக்கரசு, ’பூவுலகு’ சுந்தர்ராஜன், மருத்துவர் எழிலன், பேராசிரியர் தொ.பரமசிவம், கோவை ஞானி மற்றும் தலித்திய செயல்பாட்டாளர்கள் போன்றவர்கள் ஏதேனும் ஒரு அடையாளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்காக மட்டுமே அழைக்கப்படுவார்கள். பிற சமயங்களில் தவிர்க்கப்படுவார்கள்.
உதாரணமாக ஈழப்பிரச்சனை குறித்து கோவைராமகிருட்டிணன் அழைக்கப்படுவார், காவேரி பிரச்சனை குறித்து மணியரசன் அழைக்கப்படுவார், சமூகப்பிரச்சனை குறித்து கொளத்தூர்மணி, சூழலியல் சார்ந்து பூவுலகு சுந்தர்ராஜன் என பட்டியல் தயாராக இருக்கும். இவர்கள் பிற தளத்திலும் இயங்குபவர்கள். இவர்கள் ஒரு அரசியல் கொள்கையின் அடிப்படையில் சமூகத்தினை, அரசியலை அணுகுபவர்கள், அனைத்து சமூக-அரசியல்-பொருளியல் பிரச்சனைக்கான அடித்தளத்தினை அறிவியல் பூர்வமாக உணர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் அனைத்திற்கும் அழைக்கப்பட மாட்டார்கள், மாறாக ஞாநி போன்றவர்கள் அனைத்திற்கும் கருத்து சொல்ல அழைக்கப்படுவார்கள்.
பொதுவுடமை சார்ந்து இயங்கும் தோழர்கள் அரசின் கொள்கைகளை கேள்விக்குள்ளாக்குவர்கள், இதன்மூலம் அதிகாரிகளும், அரசியல் கட்சிகளும் அம்பலமாகும் என்பது அரசிற்கும், ஊடகத்தின் பின்திரையில் இயங்கும் நபர்களுக்கும் புரியும் என்பதால் இவர்கள் புறக்கணிக்கப்படுவதை கவனிக்கமுடியும். இதை அரசியல் நுண்ணறிவு கொண்டவர்கள் கவனித்து பல இடங்களில் பேசியதை கவனிக்க முடிந்திருக்கிறது.
அரசின் கொள்கைகளை அம்பலப்படுத்தி பேசிய பலதருணங்களில் உளவுத்துறையில் இருந்து ஊடகத்திற்கு ’செய்தி’ கொடுக்கப்பட்ட தகவலையும் கேட்டிருக்கிறேன்.
இந்த திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் விவாத அரங்கினை புரிந்து கொண்டு ஊடக விவாதங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். அரசும் ,அரசுடன் சேர்ந்து இயங்கும் ஊடக மூலதனமும் நம் கருத்துக்களை வடிவமைக்கும் வழிமுறைகளை கண்டறிவது இன்றய அவசியத் தேவை.
ஒரு சில சமயங்களில் இந்த கட்டமைப்பினை கடந்து பல ஆழமான விவாதங்கள் நடந்திருக்கிறது எனில் அது நெறியாளர், அவரது குழுவினர் உள்ளுக்குள் நடத்திய போராட்டமும் அடங்கி இருக்கிறது என அர்த்தம் . ஒரு ஊழியருக்கு இருக்கும் குறைந்த பட்ச உரிமைக்குள் அவர்கள் செய்யும் சாமர்த்தியம் இதை சாத்தியப்படுத்தியிருக்கும்!”
(திருமுருகன் காந்தியின் முகநூல் பதிவு)