டில்லி

ற்போது தூங்கிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் காவலர் மோடியை எழுப்புவோம் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆஸாத் நேற்று கூறி உள்ளார்.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் ஒரு எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப் பட்டுள்ளார்.   உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ்  பகுதியில்  ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.   அந்தப் பெண்ணின் தந்தையை உறுப்பினரின் சகோதரர் தாக்கியதில் அவர் மரணம் அடைந்துள்ளார்.

இது போன்ற நிகழ்வுகளை எதிர்த்து நேற்று இரவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டில்லியில்  இந்தியா கேட் அருகே மெழுகு வர்த்தி ஏந்தி  போராட்டம் நடத்தினார்.   இந்தப் போராட்டத்தில் அவருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தனது மகல் பிரியங்காவுடன் கலந்துக் கொண்டார்.

இந்த போராட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ :

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கேட்டின் முன் போராட்டம் துவங்கும் முன்பு “எங்கு பெண்களோ குழந்தைகளோ பலாத்காரம் செய்யப்பட்டாலோ , கொல்லப்பட்டாலோ,  அப்போது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறோம்.   இது அரசியல் விவகாரம் அல்ல தேசிய விவகாரம்” என பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

போராட்டத்தின் போது ராகுல் காந்தி. “நமது பிரதமர் மோடி ‘பெண் குழந்தைகளை காப்போம்’ என கோஷமிடுகிறார்.   அதை சொல்லில் மட்டும் இன்றி செயலிலும் காட்ட வேண்டும்” எனக் கூறினார்.

நூற்றுக்கணக்கான பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் கலந்துக் கொண்ட இந்த கூட்டத்தில் ஒரு சில இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   அப்போது ராகுலின் சகோதரி பிரியங்கா வதேரா காந்தி, “இது அமைதிக் கூட்டம்.   இந்த இடத்தில் தள்ளுமுள்ளு செய்வோர் இங்கிருந்து அகன்று தங்கள் வீடுகளுக்கு செல்லலாம்”  என கூட்டத்தினரை பார்த்து கூறினார்.

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆஸாத், “அரசு தூங்குகிறது என்றால் அரசின்  பாதுகாவலர் மோடியும் தூங்குகிறார் என பொருள்.  அவரை எழுப்ப காங்கிரஸ் இந்த போராட்டத்தை நடத்துகிறது” எனக் கூறினார்.   கடந்த 2014ஆம் வருட தேர்தல் பிரசாரத்தில் மோடி “என்னை பிரதமாராக தேர்ந்தெடுக்க வேண்டாம்.  நாட்டின் பாதுகாவலராக தேர்ந்தெடுங்கள்” எனக் கூறியதை நினைவூட்டும் வண்ணம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கத்துவா பகுதியில் சிறுமி ஆசிஃபா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு ஒரே ஒரு பாஜக அமைச்சரான வி கே சிங் மட்டுமே இதுவரை கண்டனம் தெரிவித்துள்ளார்.  வி கே சிங், “ஆசிஃபா வை ஒரு மனிதப் பிறவியாக அங்கீகரிக்க நாம் தவறி விட்டோம்.  ஆனால் அவருடைய மரணத்துக்கு நீதி கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது” எனக் கூறி உள்ளார்.