நெல்லை :
காரைக்காலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற ஆம்னி பஸ் நெல்லை அருகே ரோட்டில் கவிழந்ததில் 2 குழந்தைகள் உள்பட 10 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காரைக்காலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தினமும் தினமும் தனியார் ஆம்னி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் நேற்றிரவு 9.30 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டது. நேற்று அதிகாலை நெல்லை வழியாக நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. நெல்லை -கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் பணகுடியை அடுத்துள்ள பலாக்கொட்டைபாறை என்ற இடத்தில் அதிகாலை 5.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது.
பஸ் டிரைவரான ஜான் தூக்க கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அசதியில் அவர் சற்று கண் அயர்ந்ததால், பஸ் இடதுபுறம் உள்ள பள்ளத்தில் லேசாக சாய்ந்தது. இதை சரி செய்ய டிரைவர் முயன்று, வேகமாக வலது புறத்தில் பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் தடுப்பு சுவர் மீது மோதி இடதுபுறமாக கவிழ்ந்து சுமார் 100 மீட்டர் தூரம் பஸ் இழுத்துச் சென்றது. இதில் பஸ்சில் இடதுபுற ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இடது ஓரத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி ரத்த வெள்ளத்தில் பலியாயினர். தகவலறிந்து வந்த வள்ளியூர் தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 5 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் என 10 பேர் பலியாயினர். காயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.