தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றார். தவிர, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் பல அரசியல் பிரமுகர்களும், பத்திரிகை அதிபர்களும் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியபோது, “நான் ரசித்த முதல் தமிழ் சிவாஜியுடையது.
அதன் பிறகு , அந்தத் தமிழுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்று தெரிந்தது முதல் நான் அவரது ரசிகன் ஆனேன். இந்த விழாவில் என்னை அழைத்தபோது, ரஜினி இந்த விழாவுக்கு வருகிறார பேசுகிறாரா என்று கேட்டேன். அவர் பேசவில்லை என்றதும், நானும் பார்வையாளராக கலந்துகொள்ளலாம் என்று நினைத்தேன்.
ஆனால், “ இப்போது தற்காப்பு முக்கியமில்லை, தன்மானமே முக்கியம்” என்று, இந்த விழாவில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன். உடனே, தி.மு.க.வில் சேரப் போகிறீர்களா என்று கேட்கிறார்கள். தி.மு.க.வில் சேருவது என்றால் 1989-ல் கருணாநிதி அழைத்தபோதே சேர்ந்திருப்பேன்” என்று கமல் தெரிவித்தார்.
மேலும், “ அரசியல் பேசுவதற்கான மேடை இது இல்லை. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்பவர்கள் இங்கு ஒரே மேடையில் இருக்கிறார்கள். இந்தக் கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தேன். திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமோ தென்னிந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை.
சிந்து நாகரிகம் முதலே திராவிடம் இருக்கிறது. ‘ஜனகனமன’ பாடலில் திராவிடம் உள்ள வரை திராவிடம் இருக்கும். திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை. திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது” என்று கமல் பேசினார்.