சென்னை:
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக தி.மு.க. பேச்சாரளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரனுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தே.மு.தி.க. தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் பத்திரிகையாளர்களை நோக்கி காறித்துப்பினார். இதற்கு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்ததோடு, விஜயகாந்த் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்தினர். அப்போது தே.மு.தி.க. எம்.எல்.ஏவான பார்த்திபன் தலைமையிலான அக் கட்சியினர் பத்திரிகையாளர்களை தாக்கினர். இதில் சில பத்திரிகையாளர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அக் கட்சி பேச்சாளரும், கவிஞருமான மனுஷ்ய புத்திரன், “முதலமைச்சரிடம் கேள்வி கேட்காத பத்திரிகையாளர்கள் மீது காறித்துப்பணும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் விஜயகாந்த் செய்துவிட்டார். விஜயகாந்த் செயல் பாராட்டுக்குரியது.” என்று பேசினார்.
இதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம், தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து அச் சங்கத்தின் தலைவர் வி.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனநோயாளியாக தமிழகம் முழுதும் வலம் வந்துகொண்டிருக்கும் தே.மு.தி.க. தலைவரும் பொறுப்பு மிக்க எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், பத்திரிகையாளர்கள் மீது காறித்துப்பிய விவகாரம், பத்திரிகையாளர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மதுரை திருமங்கலத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய பிரபல தி.மு.க. பேச்சாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் “முதலமைச்சரிடம் கேள்வி கேட்காத பத்திரிகையாளர் மீது காறித்துப்பணும், காறித்துப்பணும், காறித்துப்பணும், காறித்துப்பணும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் விஜயகாந்த் துப்பி விட்டார். விஜயகாந்த் செயல் பாராட்டுக்குறியது” என்று பேசியிருக்கிறார்.
மனுஷ்யபுத்திரனின் இந்த கேவலமான பேச்சை சென்னை பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறியுள்ளார்.
விஜகாந்த் காறித்துப்பிய விவகாரம் மெல்ல அடங்கிய நேரத்தில் இப்போது மனுஷ்யபுத்திரன் அதே போல பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.