நூல் விமர்சனம்: மதுவிலக்கு: அரசியலும், வரலாறும்

 

Madhu Vilakku Front

 

மதுவிலக்கு குறித்து தீவிரமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வந்திருக்கும் மிகப் பொருத்தமான நூல், ஆர் .முத்துக்குமார் எழுதியிருக்கும் “மதுவிலக்கு: அரசியலும் வரலாறும்.” காந்தி – ராஜாஜி காலத்தில் இருந்து தற்போதைய அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு போராட்டம் வரை தெளிவாக, சுவையாக விவரிக்கிறது நூல்.

நூலில் இருந்து..

பூரண மதுவிலக்கு என்று இருபது ஆண்டுகளாக தீவிரமாக பேசிக்கொண்டிருந்த ராஜாஜி, தான் ஆட்சிக்கு வந்ததும் அதனை அவசர கதியில் மதுவிலக்கை அமல்படுத்திவிடவில்லை. முதலில் தன் சொந்த மாவட்டமான சேலத்தில். பிறகு அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தினார்.

“குடித்துவிட்டு வந்து தங்களது மனைவி மக்களையே தாக்கியவர்கள் பற்றிய பல கதைகளை நான் அறிவேன். அத்தகையவர்களிடம் அடிபட்ட பெண்களின் கதறல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது ஒலித்துக் கொண்டிருக்கும்வரை ஒற்றை மதுக்கடை திறக்கப்படுவதைக்கூட அனுமதிக்க மாட்டேன்” என்றார் முதலமைச்சர் அண்ணா. அதைக் கேட்டதும், திமுக அரசைப் பாராட்டிப் பேசினார் காமராஜர். திமுக அரசைப் பாராட்டி காமராஜர் பேசியது அதுதான் முதன்முறை. அநேகமாக அதுதான் கடைசி முறையும்கூட.

துவிலக்கு ரத்து குறித்து முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த விளக்கங்களை ராஜாஜியால் ஏற்கமுடியவில்லை. இருபது நிமிட சந்திப்பின் முடிவில் அதிருப்தி தோய்ந்த மனத்துடன் வீடு திரும்பினார். மதுவிலக்கை ரத்து செய்யும் நடவடிக்கை பாசிச நடவடிக்கை என்று விமரிசித்தார் காமராஜர். ஆதரவு குறைவாகவும் எதிர்ப்பு அதிக அளவிலும் இருந்தாலும், மதுவிலக்கை ரத்து செய்யும் விஷயத்தில் பின்வாங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்த முதலமைச்சர் கருணாநிதி, அதை பட்ஜெட் உரையின்போது அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

“மதுவிலக்குச் சட்டத்தை யார் மீறினாலும், அவர்களுக்குக் கடும் தண்டனை தரப்பட வேண்டும். அதிலும், அந்தச் சட்டத்தை அமல்படுத்தவேண்டிய அதிகாரிகளே மீறுவார்களானால், அவர்களுக்குக் கொடுந்தண்டனை கொடுக்க வேண்டும்.” என்றார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். புதிய மதுவிலக்குச் சட்டத்தின்கீழ் முதல் முறை பிடிபட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை; இரண்டாவது முறை பிடிபட்டால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை; மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவர் என்று அறிவித்தார் எம்.ஜி.ஆர்.

தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கொடுத்த முக்கியமான வாக்குறுதி, மலிவு விலை மதுவை ஒழிப்பேன் என்பதுதான். அவர் கொடுத்த வாக்குறுதிக்குப் பெண்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. அதன்படி ஆட்சிப்பொறுப்பேற்ற கையோடு மலிவு விலை மதுவை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

துவிலக்கு என்பதே தமிழக அரசியல் வரலாற்றில் ஒருவித தள்ளாட்டத்துடன்தான் இருந்துவருகிறது என்பதால், அதன் அரசியலையும் வரலாற்றையும் வாசகர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள ஏதுவாக இந்தப் புத்தகம் ஆறு பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு: அரசியலும் வரலாறும்

ஆர். முத்துக்குமார்

விலை ரூ 150/-

பக்கங்கள் 200

 

வெளியீடு: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,

10/2 (8/2), போலீஸ் குவார்ட்டர்ஸ் சாலை,

(தியாகராயநகர் பேருந்து நிலையம் அருகில்),

தியாகராய நகர், சென்னை – 17

தொடர்புக்கு: 72 000 500 73

http://sixthsensepublications.com/index.php/categories/new-arrivals/-667.html