samuthirakani
இயக்குநர் சமுத்திரக்கனி
‘சேரன் அண்ணனோட ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ பட ஸ்பெஷல் ஷோ போயிருந்தேன். அதுல ஒரு சீன். கூடவே இருந்த நண்பன் ஒருத்தன் இறந்துபோயிடுவான். அப்ப, ‘மூத்த புள்ளைய நம்பித்தானடா ஒவ்வொரு குடும்பமும் இருக்கு. பொறுப்பு இல்லாம நீங்க செத்துப்போயிடுறீங்க. இங்க மொத்தக் குடும்பமும் ஆடிப்போய்க்கிடக்கே’னு அவனோட அப்பா கதறுவார். அந்தக் காட்சியிலேயே மனசு நின்னுடுச்சு. வீட்டுக்கு வந்தா, ஒரு வேலையும் ஓடலை. ஏதோ உறுத்துது. அந்தக் குடைச்சலுக்குக் காரணம், கால ஓட்டத்தில் நான் மறந்த, இழந்த என் நண்பன் குருசாமி!”
”1992-ல் நான் சென்னைக்கு வந்தேன். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மெயின்ரோடில் சின்ன அறையில் தங்கியிருந்தப்ப, குருசாமி என் பக்கத்து அறை நண்பர். ‘நண்பர்’ காலப்போக்கில் ‘நண்பன்’ ஆனான். பாக்யராஜ் சார்கிட்ட உதவியாளரா இருந்துட்டு வெளியே வந்து, தனியா சினிமா பண்ணும் முயற்சியில் இருந்தான். சென்னையையும் சினிமாவையும் எனக்கு அணுஅணுவா அனுபவிக்கக் கத்துக்கொடுத்தவன். இன்னைக்கு நான் ஆறேழு படங்கள் பண்ணி, ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கேன். ஆனா, இப்போ அவன் இல்லை. ஆமா, குருசாமி இறந்து 11 வருஷம் ஆகுது!”
”பல நாள் காலைல அஞ்சு மணிக்கு எல்லாம் எழுப்பிவிட்ருவான். கோடம்பாக்கம் டு சேப்பாக்கம் தூர்தர்ஷன் ஆபீஸ் வரை நடந்தே போவோம். சாப்பாட்டுக்கு எல்லாம் வழி இருக்காது. ரெண்டு மணி நேரம் நடந்து ஏழு மணிக்குப் போய்ச் சேருவோம். தூர்தர்ஷன் அதிகாரிகள் வர்ற வரை காத்திருந்து, ‘ஏதாவது நிகழ்ச்சி இருந்தா குடுங்க… பண்றோம்’னு கேட்போம். அவங்க பெரும்பாலும் எங்களை நிராகரிச்சிருவாங்க. திரும்பி ரூமுக்கு நடக்க ஆரம்பிப்போம். இப்படி, சென்னையில் எங்க கால் படாத இடங்களே இல்லை.”
போன இடங்களில் எல்லாம் தோல்வி… தோல்வி. ஒருகட்டத்துல குரு துவண்டுட்டான். ‘என்னால இனி முடியாதுனு நினைக்கிறேன்டா… நீ ஜெயிச்சு வந்துடுவ. அப்ப நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்’னு சொல்வான். தன்னைத் தோக்கடிச்ச, தான் தொலைச்ச சினிமாவை என் மூலமா மீட்டு எடுக்கணும்னு நினைச்சான். ‘கனி, இன்னைக்கு வேணும்னா நம்ம கையில அஞ்சு பைசா இல்லாம இருக்கலாம். ஆனா, உன் ஒவ்வொரு கதையிலும் பல கோடிகள் இருக்குடா. நம்பிக்கையை மட்டும் விட்டுராதடா’னு, நான் தளர்ந்து போகாமப் பார்த்துக்கிட்டான்”
”தொண்ணூறுகளின் கடைசினு நினைக்கிறேன். ஒருநாள் டீ குடிச்சிட்டு இருந்தப்ப, குரு தன்னை மறந்து திடீர்னு பயங்கரமாக் கத்த ஆரம்பிச்சான். எங்களால அவனைக் கட்டுப்படுத்த முடியலை. நடுரோட்டுக்கு ஓடி, பல்லவன் பேருந்தை மறிச்சு, ரெண்டு கைகளாலும் ஆங்கிள் பார்த்து ஷாட் வெச்சான். அன்னைக்கு அவன் பேசினது இப்பவும் ஞாபகம் இருக்கு. ‘எல்லாம் முடிஞ்சிருச்சுல்ல… இனிமே பிரச்னை இல்லை. அப்படியே ஏத்து. என் மேல ஏத்திட்டுப் போயிட்டே இரு’ன்னான். சினிமா கொடுத்த ஏமாற்றங்களும் வலிகளும் அவனை என்னமோ பண்ணிருச்சு. ஒரு மணி நேரம் போராடி, இழுத்து உக்கார வெச்சோம்.
எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியலை. ‘குரு, உனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைபோல. எல்லாரும் திசைக்கு ஒருத்தரா ஓடிட்டு இருக்கோம். எப்படியாச்சும் கொஞ்சம் பணம் புரட்டித் தர்றோம். தயவுசெஞ்சு சொந்த ஊருக்குப் போயிடு. கொஞ்ச நாள் கழிச்சு நானே உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்’னு சொல்லி, அன்னிக்கு முடிஞ்சது 200 ரூபாய் புரட்டிக்கொடுத்தோம். ‘ஊருக்குப் பத்திரமா போயிடுவதானே?’னு கேட்டதுக்கு, ‘என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சுட்டீங்களாடா?’னு கோபமாத் திட்டிட்டே போனான். அவனை, அன்னைக்குத்தான் கடைசியாப் பார்த்தேன்!
டி.வி சீரியல் பண்ண எனக்கு வாய்ப்பு கிடைச்சப்போ அவனைக் கூப்பிட்டுக்கலாம்னு விசாரிச்சா, மனநோயாளி ஆகிட்டான்னு தகவல். மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. பிறகு, ‘நிறைஞ்ச மனசு’ பட வாய்ப்பு கிடைச்சது. அப்பவும் அவனைத் தேடினேன். ‘செத்துப்போயிட்டான்’னு சொன்னாங்க… அதிர்ந்துட்டேன். ‘நிறைஞ்ச மனசு’ படம் எடுத்து நான் தோத்துப்போயிட்டேன். கிட்டத்தட்ட அப்ப எனக்கும் அவனோட கடைசிக் கால மனநிலைதான். ‘இப்படித்தானே அவனுக்கும் வலிச்சிருக்கும்’னு தோத்தவனோட வலியை அனுபவபூர்வமா உணர்ந்தேன்.
அப்புறம் எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழல்; நிரூபிக்கவேண்டிய போராட்டம். ‘சுப்ரமணியபுரம்’ எடுத்து ‘நாடோடிகள்’ல மீண்டோம். இந்தக் காலகட்டங்கள்ல குருசாமியை மொத்தமாவே மறந்துட்டேன். ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ எனக்குள் குருசாமி ஞாபகத்தைத் திரும்பத் தூண்டிருச்சு. அதான் அவனைப் பெத்தவங்களைப் பார்க்கலாமேனு போனேன்”
தேனியில் இருந்து குச்சனூர் போகும் வழியில் உள்ள சின்ன கிராமம் பத்ரகாளிபுரம். உழைத்துக் களைத்த கிராமத்து முகங்கள். விசாரிப்புகளுக்குப் பிறகு, மிகச் சிறிய ஓட்டு வீட்டுக்குள் நுழைகிறார் சமுத்திரக்கனி. வீட்டின் உள்ளே ஒரு கட்டிலில் படுத்திருந்தார் பெரியவர் கணபதி. அவரிடம், ”குருவோட அப்பாங்களா? நான் அவனோட சென்னையில ஒண்ணா இருந்தவன். என் பேரு சமுத்திரக்கனி” என்று அறிமுகப்படுத்திக்கொண்டதும், எழுந்து உட்கார்ந்தவர், ஒன்றும் பேசவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து, ”நல்லா இருக்கீங்களாய்யா?” என்றவர், ”குழந்தைங்க?” என்று விசாரிக்கிறார். ”ரெண்டு புள்ளைங்க” என்றேன், ”நல்லா இருப்பய்யா, வா… உட்காரு!” என்று பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டார். குருசாமியுடனான நட்பை விவரிக்க, கைகளைப் பற்றிக்கொண்டவர், ”நீ ஜெயிச்சவன் இந்த வீட்டுக்குள்ள வந்து நின்னுட்டல்ல… இனிமே என் புள்ளையை இந்த ஊர்ல ஒரு பய தப்பாப் பேச முடியாது. குருசாமி வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு. நீ இவ்ளோ வருஷம் கழிச்சு வந்ததுல ரொம்ப சந்தோ ஷம்யா” என்றவரின் விழிகளில் கடகடவென கண்ணீர் வழிகிறது.
”மனநிலை தடுமாறி எங்களை அவன் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டான்ப்பா. இதே சந்துல, நானும் அவனும் எத்தனைவாட்டி அடிச்சு விழுந்து உருண்டு இருக்கோம் தெரியுமா? ரொம்பச் சிரமப்படுத்திட்டான். என் எதிரிக்குக்கூட அந்த நிலைமை வரக் கூடாது. டிகிரி முடிச்ச கையோட சினிமாக்குப் போறேன்னுட்டுக் கிளம்புனான். வெடிவெச்சு, கிணறு வெட்டி சம்பாதிச்ச காசுலதான் அவனை பி.ஏ படிக்கவெச்சேன். குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். கடைசில சித்தம் கலங்கித்தான் வந்து நின்னான்!” எனக் குமுறி அழுகிறார்.
”குரு மட்டுமில்லப்பா, நான் உட்பட பல சினிமாக்காரங்க அந்த நிலைமைக்குப் போயிட்டுத்தான் திரும்பி வந்திருக்கோம். ஒவ்வொரு நிமிஷமும் போராட்டம்தான். நாங்க தட்டுத்தடுமாறி கோட்டுக்கு இந்தப் பக்கம் விழுந்துட்டோம். அவன் அந்தப் பக்கம் விழுந்துட்டான். அவ்வளவுதாம்பா. ஆனா, அவன் திறமைக்காரன்ப்பா…” – வெவ்வேறு வார்த்தைகளில் அந்தப் பெரியவரின் மனதைத் தேற்றினேன்.
”எதுக்கும் கவலைப்படாதீங்க. குருசாமி இருந்திருந்தா உங்களுக்கு என்னல்லாம் செஞ்சிருப்பானோ, அதையெல்லாம் இனி நான் செய்றேன். கடைசிக் காலத்துல ஏன் இன்னும் காட்டு வேலைக்குப் போறீங்க. ஆடு-மாடுக கொஞ்சம் வாங்கித் தர்றேன்… பார்த்துக்கங்க” என்ற சமுத்திரக்கனியின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்டவர், ”எனக்கு நீ வந்ததே போதும்பா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” என்று கைகளைப் பிடித்துக்கொண்டார்.
”அம்மா எங்க?” என்றதற்கு, ”அது சோளக் கருது வெட்டப் போயிருக்கு. அவளையும் ஒரு எட்டு பார்த்தீங்கனா சந்தோஷப்படுவா” என்றார்.
சோளக்காட்டில் காய்ந்த கரும்புத் தட்டை போல ஒடிசலான ஓர் அம்மா ஓட்டமும் நடையுமாக வந்தார். குருவின் அம்மா காளியம்மா. என் கைகளைப் பற்றிக்கொண்ட அவர் கேட்ட முதல் கேள்வி, ”எம் புள்ளைக்கு மெட்ராஸ்ல என்னய்யா ஆச்சு?” 15 வருடங்களாக அவருக்குள் தொக்கி நின்ற கேள்வி. சமுத்திரக்கனி உடைந்த குரலில் ”என்னைப் பெத்தவளே…” என்றதும், வெடித்து அழுகிறார் அந்த அப்பாவித் தாய்.
கையெடுத்துக் கும்பிட்ட அந்த அம்மாவிடம், ”மகனைப் பார்த்து யாராவது கும்பிடுவாங்களாத்தா?” என்றார் சமுத்திரக்கனி. ”இல்லப்பா… இவ்வளவு காலத்துல அவனை விசாரிச்சு வந்த ஒரே ஆளு நீதான்யா. அங்கே அவன் அநாதையாத் திரிஞ்சிட்டு இருந்தானோனு நினைப்பேன். அவனுக்கும் ஆதரவா ரெண்டு மூணு பேரு இருந்திருக்காங்கனு இப்பத்தான் தெரியுது. அது போதும்யா!”
”ஆத்தா, குரு திரும்ப வந்துட்டான்னு நினைச்சுக்க. மூணு புள்ளைகளைப் பெத்துட்டு இந்த வயசுல ஏன் வயக்காட்டுல கிடந்து கஷ்டப்படுற? உனக்கு வேணுங்கிறதை எல்லாம் இனி நான் செய்றேன். மத்த ரெண்டு பசங்களும் என்ன பண்றாங்க?”.
இரண்டாவது மகனிடம் நலம் விசாரித்தேன், எம்.ஏ படித்த அவரின் மகள் ஆசைப்படி, சென்னையில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர்த்துவிடுவதாகவும், மூன்றாவது மகனின் +2 முடித்த மகளின் கல்லூரிப் படிப்புக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார். ”ஆத்தா, நான் இப்ப கிளம்புறேன். எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு மறுபடியும் வந்து உங்களைப் பார்க்கிறேன்” என்று கிளம்பிய போது கார் கண்களைவிட்டு விலகும் வரை, கலங்கியபடியே நின்றிருந்தார் அந்தத் தாய்.
”சினிமாவுக்காக வர்ற நம்மக் கிராமத்துப் பசங்களுக்கு, குருவை மையமா வெச்சு ஒரு விஷயத்தைச் சொல்லணும். குரு, ரொம்ப உண்மையானவன்; திறமைக்குக் குறைவில்லாதவன்; அதே சமயம் கொஞ்சம் பயந்தவன். நேர்மையும் பயமும் ஒண்ணா இருந்தா, கோடம்பாக்கத்துல ஜெயிக்கிறது கஷ்டம். இது எவ்வளவு பெரிய திறமைசாலிக்கும் பொருந்தும்.
ரூம்ல எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுவோம். ‘வாடா… நாலு பேரும் சேர்ந்து சாப்பிட்டா வேலை முடிஞ்சிடும். நீயும் ஒரு தட்டை எடுத்துட்டு வந்து உட்காரு’ம்பேன். ‘நீங்க ரெண்டு பேரும்தானே அரிசி வாங்கிட்டு வந்தீங்க. என் பங்கு அதுல இல்லை. அதனால முதல்ல நீங்க சாப்பிடுங்க. மிச்சம் ஏதாச்சும் இருந்தா, நான் சாப்பிட்டுக்கிறேன்’னு சின்னச் சிரிப்போட பம்மிக்குவான். எதுலயும் கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை. ‘பயப்படாத… 100 பேர் நின்னா, முன்னாடி போய் முதல் ஆளா நில்லு. அப்பத்தான் அவங்க பார்வை உன் மேல விழும்’னு சொல்வேன். ‘என்னமோடா… அது எனக்கு வரவே மாட்டேங்குது’ம்பான். அது அவனோட மிகப் பெரிய மைனஸ். ஆனா, அவனை எனக்கு ரொம்பப் பிடிச்சதுக்கு அந்த உண்மையும் நேர்மையும்தான் காரணம்.
ஆனா, இங்கே அந்த உண்மையை, திறமையை யார் மதிக்கிறா? ஜெயிக்கணும்கிற வெறியில மத்தவங்களை ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்காங்க. குருவோட வீட்டு நிலைமையைப் பார்த்தீங்கள்ல. சினிமாவுல ஜெயிக்கணும்னு கிளம்பி வர்ற ஒவ்வொருத்தரும், இந்த மாதிரி வலியுள்ள குடும்பத்துல இருந்துதான் வர்றாங்க. அவங்க உணர்வுகளையும் திறமைகளையும் நாம் இன்னும் சரியா அங்கீகரிக்கணும்!”
https://www.facebook.com/K.S.Thangasamy/?fref=photo