சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி வரும் 25, 26ம் தேதிகளில் திருவாரூரில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
தனது சொந்த தொகுதியான திருவாரூருக்கு திமுக தலைவர் கருணாநிதி வரும் 25ம் தேதி செல்கிறார். இதற்காக 24ம் தேதி இரவு சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்படுகிறார். மறுநாள் காலை மாவட்ட திமுகவினர் சார்பில் திருவாரூர் ரயிலடியில் கருணாநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அன்று மாலை திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 26ம் தேதி காலை 9 மணிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டடங்களை அவர் திறந்து வைக்கிறார். மாலை 6 மணிக்கு கூத்தாநல்லூர் நகர திமுக அலுவலக கட்டடத்தை அவர் திறந்துவைக்கிறார். அன்றிரவு 10 மணிக்கு புறப்பட்டு சென்னை திரும்புவார் என திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சென்னையை விட்டு வெளியில் திருவாரூர் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு கருணாநிதி வெற்றி பெற்றார்.
திருவாரூர் அவரது சொந்த ஊரும் கூட. இங்கு வெற்றி பெற்ற பிறகு ஒரு சில முறை தான் தொகுதிக்கு கருணாநிதி வந்து சென்றுள்ளார். தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி, தெரு முனை பிரச்சாரங்கள் என திமுகவினரை கருணாநிதி முடுக்கிவிட்டுள்ளார்.
ஒரு புறம் ஸ்டாலின் நமக்குநாமே பயணம் திட்டத்தின் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தேர்தலில் கூட்டணி அமைக்கவும் திமுக மறைமுக வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கருணாநிதியும் தன் பங்குக்கு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார்.
எப்போதும் இல்லாத வகையில் திடீரென தன் மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கருணாநிதி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுவும் தேர்தல் ஸ்டென்ட் தான் அரசியல் வல்லுனர்களால் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து திருவாரூரில் கருணாநிதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தனது சொந்த தொகுதிக்கு கருணாநிதி வருவது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. இந்த முறையும் திருவாரூரில் தான் கருணாநிதி போட்டியிட முடிவு செய்திருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனால் தான் தற்போது தொகுதி மக்களை சந்திக்க கருணாநிதி செல்கிறார் என்று பேச்சும் அடிபடுகிறது.