truvanmiyur

சென்னை திருவான்மியூரில் சாலை நடுவே இருக்கும் வால்மீகி கோயிலால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. “இந்தக்கோயிலை அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும்” என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த பகுதி வாசிகள், “மிக முக்கியமான போக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையின் நடுவே இந்த கோயில் இருக்கிறது. எதிர்வரும் வாகனங்களை அறிய முடியாமல் விபத்துக்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஆகவே இந்த வால்மீகி கோயிலை அகற்ற வேண்டும். போக்கு வரத்து பாதிப்பு இல்லாத பகுதியில் இதைவிட பெரிதாக வால்மீகிக்கு கோயில் அமைக்கலாம்” என்கிறார்கள். இந்த கோயில், அருகிலுள்ள மருந்தீஸ்வரர் கோயிலுடன் இணைந்தது. அந்த கோயில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் “இந்த கோயிலின் மகத்துவத்தை உணராவதவர்கள்தான் அகற்றி வேறு இடத்தில் வைக்க வேண்டும் என்கிறார்கள். திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ராம அவதாரத்தை ராமாயணம் என்கிற இதிகாசமாக படைத்தவர் வால்மீகி முனிவர். சிவனை வணங்கிய பிறகே ராமாயணம் எழுத ஆரம்பித்தார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு இங்கே கோயில் அமைக்கப்பட்டது. இவரது பெயராலேயே இத்தலம் திருவால்மீகியூர் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் திருவான்மீகியூர் என்று மருவியது.

truvanmiyur2

பல்லவ மன்னரால் கட்டப்பட்ட இந்தக்கோயிலை யாரும் அகற்றக்கூடாது என்று பட்டாவே இருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலை அமைந்த போதே, இந்தக் கோயிலை இடிக்க முற்பாட்டார்கள். ஆனால் சட்டப்படி அப்படி செய்ய முடியாது என்பதால், கோயிலுக்கு இருபுறமும் சாலை அமைத்தார்கள்” என்கிறார்கள். திருவான்மியூர் பகுதியில் வசிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தின் “விடுதலை” ராஜேந்திரன் நம்மிடம் விரிவாகவே பேசினார்: “மத்திய கைலாஷ் உட்பட பல கோயில்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கின்றன. இந்த வால்மீகி கோயிலும் அப்படித்தான். இப்படி போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் கோயில்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.

truvanmiyur3

உடனே சிலர் இந்துத்துவம் அது இது என்பார்கள். அவர்கள் ஒரு விசயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். மோடி முதல்வராக இருந்த குஜராத்திலேயே பெரும்பாலான நடைபாதை கோயில்கள் அகற்றப்பட்டன. தவிர உச்ச நீதிமன்றமே ஒரு வழக்கில் “போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வழிபாட்டுத்தலங்களை அகற்றவேண்டும்” என்று உத்தரவிட்டது. அதோடு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெடுவும் விதித்தது. அதை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவும் பொருட்படுத்தவில்லை.. அடுத்து முதல்வரான கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை. வேலூர் நாராயணன் சென்னை மாநகர மேயராக இருந்தபோதுதான் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் போக்குவரத்துக்கு தடையாக இருந்த வழிபாட்டுத்தலங்களை அகற்றினார்”என்றார். அவரிடம், “காலம்காலமாக கோயில்கள் இருந்த இடத்தில் அல்லது கோயில்களுக்குச் சொந்தமான இடத்தில் சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைக்கப்படுகிறன்றன இப்படியே போனால் கோயில்களே இல்லாமல் போய்விடும் என்று ஆன்மிகவாதிகள் அச்சப்படுகிறார்களே” என்றோம். அதற்கு “விடுதலை” ராஜேந்திரன், “காலம் காலமாகவே இருக்கும் கோயில்கள் மிகக் குறைவே. சென்னையை எடுத்துக்கொண்டால் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், போன்ற சிலதான் அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. மற்ற பெரும்பாலான கோயில்கள் வியாபார நோக்கத்துடன் கட்டப்பட்டவைதான். இவை ஆகம விதிப்படி கட்டப்பட்டவை அல்ல.

truvanmiyur4

வால்மீகி கோயில் பழமையானதாக இருந்தாலும், அதை “சட்டப்படி” அகற்ற முடியாது என்றாலும்.. அதற்கேற்ப சட்டத்தை மாற்றி கோயிலை அகற்ற வேண்டும். ஏனென்றால் கடவுளோ, சட்டமோ.. மக்களின் நலனுக்காகத்தானே” என்று முடித்தார் “விடுதலை: ராஜேந்திரன். திருவான்மியூர் பகுதி மக்களின் கருத்தாக ஒலிக்கும் “விடுதலை” ராஜேந்திரன் குரல், ஆளுவோர் காதுகளுக்கு எட்டுமா? வால்மீகி கோயில், மக்களுக்கு இடையூறு இல்லாத இடத்துக்கு மாற்றப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!