திருக்காவளம்பாடி (திருநாங்கூர்) பெருமாள் கோயில்
புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் திருமால் விரும்பி பள்ளிகொண்ட திருத்தலம்தான் திருக்காவளம்பாடி இதற்கு மற்றுமொரு பெயர் திருநாங்கூர். பேருந்து மார்க்கம் உண்டு. சீர்காழி, திருவெண்காட்டிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. புகழ்பெற்ற ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்பதும், ஆழ்வார்களில் முக்கியமான ஆழ்வாரான திருமங்கை ஆழ்வார் அவதரித்த மங்கை மடம். திருக்குறையனூர் ஊருக்கு அருகேயும் இந்த ஸ்தலம் இருப்பது பெருமை தான்.
மூலவர்
கோபால கிருஷ்ணர் இவருக்கு இன்னொரு பெயர் ராஜகோபாலன். ருக்மிணி சத்யபாமாவுடன் நின்ற திருக்கோலம். தாயார் மடவரல் மங்கை செங்கமல நாச்சியார். எனினும் மற்ற கோயில்களைப் போலத் தாயாருக்கு இங்குத் தனி சன்னதி இல்லை. தீர்த்தம் தடமலர்ப் பொய்கை. விமானம் ஸயம்பு விமானம். பகவான், ருத்ரனுக்கும், சேனைத் தலைவருக்கும் அவர்களது தவத்தினை மெச்சி, நேரடியாகத் தரிசனம் கொடுத்த இடம். தை அமாவாசைக்கு மறுநாள் இந்த ஊரில் நடக்கும் கருட சேவை மிகவும் பிரசித்தி பெற்றது.
சின்னக் கோயில் என்றாலும் இதன் கீர்த்தி மிகப் பெரியது. அமைதியை விரும்பி பெரும்பாலான ஜனங்கள் இங்கு வருவதுண்டு. ருத்ரனுக்கு பகவான் திருவுருவத்தைக் காட்டி மெய்சிலிர்க்க வைத்த சம்பவம் இங்கு தான் உண்டு. மற்றபடி மற்ற எல்லா கோயில்களுக்குரிய விசேஷங்கள் இங்கு உண்டு.
பரிகாரம்
கோபத்தால் தவறு செய்பவர்கள், சொந்தக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், முன்விரோதம் காரணமாகப் பகை உண்டு நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள். வறுமையினால் மிகவும் கஷ்டப்படுகிறவர்கள் வெளியூர் பயணத் தடையால் வாழ்க்கையில் திசை மாறிக் கொண்டிருப்பவர்கள், தொழிலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையால் பணத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள், ஒப்பந்தம் செய்துவிட்டு, திருமணம் நடத்த இயலாமல் பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள் ஆகிய அனைவரும் இங்கு வந்து பெருமாளை சேவித்தால் வியத்தகு நல்ல மாற்றங்களை அடைவார்கள். மனநிம்மதியும் ஆரோக்கியமும் குறைவில்லாமல் பெறுவார்கள் என்பது வெளிப்படை உண்மை.