சென்னை:
கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த கன மழையால் தலைநகரமான சென்னை வரலாறு காணாத பாதிப்பை சந்தித்தது. லட்சகணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை இழந்து தவித்தனர். தமிழகம முழுவதும் இருந்து உதவிக் கரங்கல் நீண்டதால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தற்போது படிப்படியாக தலை நிமர்ந்து வருகிறது.
இதற்கிடையில் வெள்ள நிவாரணமாக வீட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். இவை உள்பட பல்வேறு நிவாரண அறிவிப்புகளையும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடுகளை தமிழக அரசு அறிவித்தது.
செம்பரபாக்கம் ஏரியில் இருந்து ஒரே நேரத்தில் அதிகமான கன அடி நீரை திறந்துவிட்டதால் தான் சென்னை அதிகளவில் பாதித்தது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டினார். இது குறித்து புகார் மனுவை ஆளுனர் ரோசய்யாவை சந்தித்து கொடுத்தனர். விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என திமுக கோரி வருகிறது.
இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் ஆர்வமுடன் செய்து வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தை அமுக்க அதிமுக அரசு திட்டமிட்டு காய்களை நகர்த்தி வந்தது. அதற்கு ஏற்றார்போல் நேற்று முதல் நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்த தொடங்கிவிட்டது. ஒரே நாளில் 14 லட்சம் வங்கி கணக்குகளில் வரவு வைத்ததாக தமிழக அரசு அறிவித்தது. வங்கி கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் கிடைத்ததால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
குறிப்பாக ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் இந்த தொகையை அதிமுக அரசு செலுத்தி மக்களிடம் நல்ல பேரை தேட முயற்சித்துள்ளது. அதோடு அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸையும் நேற்று அறிவித்து திமுக.வின் ஆர்ப்பாட்டத்தை திசை திருப்ப முயற்சிகள் மேற்கொண்டது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் அதிகளவில் கலந்துகொள்ளவில்லை என உளவுத் துறை தெரிவித்துள்ளது.
ஏன் என்றால் இன்று அனைவரும் பணம் எடுப்பதற்காக வங்கிகளுக்கு சென்றுவிட்டதாக கூறுகின்றனர். எப்படி எல்லாம் அரசியல் நடத்துகிறார்கள். மக்களை மீண்டும் மடையர்களாக்க இரு திராவிட கட்சிகளும் முயற்சிக்கிறதே என்று மக்கள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.