உயர்நீதிமன்றத்தன் உத்தரவையும் மீறி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரின் உடலை, தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்த நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையலி கூறியிருப்பதாவது:
“நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகில் உள்ள திருநாள் கொண்டச்சேரி என்ற ஊரில் 40 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் எவராவது இறந்து போனால் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கடலாழி ஆற்றங்கரைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டும். இதற்கு பாதை வசதி இல்லாததால், வயல் வரப்பு வழியாகத்தான் உடலைத் தூக்கிச் செல்ல வேண்டும்.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி திருநாள் கொண்டச்சேரியில் குஞ்சம்மாள் (வயது 80) என்பவர் இறந்தபோது, உடலை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றனர். அதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் பதற்றமான சுழல் உருவாகி, காவல்துறை குவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. வழுவூர் மக்களின் எதிர்ப்புக்கு பணிந்த அரசு அதிகாரிகள், வயல் வரப்பு தனிப்பாதை வழியாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி குஞ்சம்மாளின் கணவர் செல்லமுத்து (வயது 85) இறந்து போனார். இவரது உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வழியில்லாததால் வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். மறைந்த செல்லமுத்துவின் பேரன் கார்த்திகேயன், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செல்லமுத்து சடலத்தை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை முழு பாதுகாப்பு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி செல்லமுத்து உடலை வழுவூர் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தனிப்பாதையில் கொண்டுபோக வேண்டும் என்று அரசு அதிகாரிகள் வற்புறுத்தினர். இதனை ஏற்க முடியாது என்று செல்லமுத்து உறவினர்களும், திருநாள் கொண்டச்சேரி மக்களும் போராட்டம் நடத்தியபோது, ஐநூறு காவல்துறையினர் சூழ்ந்து கொண்டு, வழுவூர் பொதுப்பாதை வழியாக சடலத்தை கொண்டுபோக முடியாமல் தடை செய்தனர். மயானப் பாதை உரிமை கேட்டுப் போராடிய தலித் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி இருப்பதும், உயர்நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்து, செல்லமுத்துவின் உடலை வலுக்கட்டாயமாக தனிப்பாதையில் எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ள அரசு அதிகாரிகளின் செயலும் வன்மையான கண்டனத்துக்கு உரியது.
தலித் மக்களின் மயானப் பாதை உரிமையை பறித்தது மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறிய அரசு அதிகாரிகள் மீதும், தலித் மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.”
– இவ்வாறு தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.