மும்பை

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவை எதிர்த்து 180 இஸ்லாமிய மத குருக்கள் போராடி  வருகின்றனர்.

மும்பை நகரில் அமைந்துள்ள தாராவி பகுதி ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப்பகுதி ஆகும்.  சுமார் 2.5 சதுர கிமீ அளவில் உள்ள இந்தப் பகுதியில் சுமார் 6.5 லட்சம் பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். ஒற்றை அறை கொண்ட ஒரு வீட்டில் சுமார் 10 பேர் வசிக்கும் அவலம் இங்குள்ளது.  அத்துடன் இந்த பகுதியில் பல குடும்பத்தினர் ஒரே கழிவறையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் வசிக்கும் மக்களில் 30% பேர் இஸ்லாமியர்கள் ஆவார்கள்.  இந்த பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அன்று முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.  மிகவும் அதிகமான அளவில் மக்கள் தொகை உள்ள இந்த சிறிய இடத்தில் கொரோனா பரவுதலும் அதிகமாக இருந்தது.  இங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான பாமிலா ஃபவுண்டேஷன் தனது சேவையை மவுல்விகள், மவுலானாக்கள் மற்றும் இளைஞர்கள் மூலம் தொடங்கியது.

மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் கொரோனா பரவுதலும் அதிகமாக இருக்கும் என்பதால் பாமிலா ஃபவுண்டேஷன் நிறுவனர் ஆசிஃப் பாமிலா மக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க முயன்றார்.  அத்துடன் ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகள் நெருங்கியதால் அவர் கூட்டத்தைக் குறைக்க மவுல்விகளின் உதவியை நாடினார்.  இஸ்லாமியர்கள் தங்கள் மத நம்பிக்கையை விட மனித நலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என மவுல்விகள் மக்களுக்குப் போதனை செய்தனர்.

மேலும் மாலை வேளைகளில் ரம்ஜான் நோன்பு திறப்பின் போது நடைபெறும் தொழுகைகளை வீட்டிலேயே நடத்த மவுல்விகள் வலியுறுத்தினர்.  இது குறித்து சுமார் 180 மவுல்விகள் ஒவ்வொரு வீடாகச் சென்று கொரோனா குறித்தும் கூட்டத்தைத் தவிர்ப்பது குறித்தும் பிரசாரம் செய்தனர்.  மேலும் ஒவ்வொரு நாளும் மசூதியில் ஒலிபெருக்கி மூலம் தனித்து இருப்பதின் அவசியம் குறித்து பிரச்சாரம் நடந்தது.

அடுத்ததாக பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க மக்கள் பெருமளவில் வெளியே வருதை தடுக்க தொண்டர்கள் வீடுவீடாக சென்று பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.   இந்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்தன எனவே சொல்ல வேண்டும். இதன் மூலம் தாராவியில் மேய் மாதம் தினசரி 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆன நிலையில் அது தற்போது முழுவதுமாக  குறைந்துள்ளது.

தாராவியில் மொத்தம் 3239 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி தற்போது 176 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். ஆயினும் இவர்களின் பணி இப்போதும் தொடர்ந்து வருகிறது. தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள்  அதிக அளவில் பணிக்குச் செல்வதும் வர்த்தகம் செய்வதும் அதிகரித்துள்ளது.  எனவே ஈண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க நேர்ந்தால் இந்த மவுல்விகள் சேவை செய்யத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.