வேலூர்: உடுமலைப்பேட்டையில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துவிட்டார். மேலும், “அது ஒன்றும் முக்கியச் செய்தி அல்ல” என்கிற அர்த்தத்தில் கூறிவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.
உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதி சங்கர், கவுசல்யா ஆகியோரை பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் வைத்து, மூன்று பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சங்கர் பரிதாபமாக உயிர் இழந்தார். படுகாயமடைந்த கவுசல்யா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்சிகிச்சை பெற்று வருகிறார்.
தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் கவுசல்யாவின் தந்தை கூலிப்படையை வைத்து இந்தக் கொலையை செய்ததாகச் சொல்லி நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.
இந்த நிலையில் வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அரசியல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த ராமதாஸிடம், “சாதி மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடியை பட்டப்பகலில் மூன்று பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளதே. தமிழகத்தில் இதுமாதிரியான கவுரவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே. இது குறித்து உங்கள் பதில் என்ன?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ராமதாஸ், “எவ்ளோ முக்கியமான செய்திகள் சொல்லியிருக்கிறேன். அதையெல்லாம் போடுங்கள். பிறகு மத்ததை பேசலாம்” என்று செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து கிளம்பினார் ராமதாஸ்.