தமிழக திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கத் தலைவராக இருந்து வரும் தாணுவுக்கு, பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சினைதான். க்யூப் நிறுவனத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம், அக்டோபர் 23ம் தேதி முதல் படங்கள் வெளியீடு நிறுத்தம்இப்படி இவர் எடுத்த எந்த முடிவையும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை.
“தயாரிப்பாளர் சங்க பொறுப்பாளர் யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை அறிவிக்கிறார்” என்று இவர் மீது தயாரிப்பாளர்கள் பலர் அதிருப்தியில் இருந்தனர்.
நடிகர் சங்க விவகாரத்தில் அந்த அதிருப்தி வெளிப்படையாக வெடித்துவிட்டது.
“இந்த தேர்தலில் சரத்குமார் அணிக்கு ஆதரவு அளிக்கிறது தயாரிப்பாளர் சங்கம்” என்று தாணு அறிவிக்க.. பொறுத்தது போதும் என்று பொங்கிவிட்டார்கள் தயாரிப்பாளர்கள்.
“நடிகர் சங்க தேர்தலில் நாம் ஏன் தலையிட வேண்டும்? ஒரு தரப்பை ஆதரித்து அவர்கள் தோற்றுவிட்டால் நமக்கும் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே நடிகர் சங்க தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களே அவர்களோடு இணக்கமாக இருப்பதுதான் முறை” என்பது தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்களின் கருத்து.
மேலும், “தொடர்ந்து தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் தாணுவை எதிர்த்து நாம் கூட்டம் போடுவோம். சங்க விதிகளை ஆராய்ந்து, அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்குவோம். அல்லது புதிதாக தயாரிப்பாளர் சங்கம் அமைப்போம்” என்று சில தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தார்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் தி.நகர் அலுவலகத்தில் நேற்று இவர்கள் கூடி பேசினார்கள். கூட்டத்துக்கு தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன் தலைமை வகித்தார்.
கூட்டம் முடிந்த பிறகு முடிவுகள் பற்றி எதுவும் இவர்கள் சொல்லவில்லை.
ஆனால், “சக தயாரிப்பாளர்களின், நிர்வாகிகளின் ஆலோசனைகளை பெறாமல் சுயநலத்துடன் முடிவெடுத்து, அதை சங்கத்தின் முடிவு என அறிவிக்கிறார் தாணு. சங்க விதிப்படி அவரை நீக்க முடியும். அதைச் செய்வோம்” என்று சிலர் ஆவேசப்பட்டிருக்கிறார்கள்.
வேறு சிலர் “எப்போதோ ஒரு படம் எடுத்துவிட்டு அதன் பிறகு திரைத்துறைக்கு தொடர்பே இல்லாதவர்களும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கிறார்கள். அவர்களை வைத்தே தாணு வெற்றி பெற்றுவிட்டார். ஆகவே, ஆக்டிவாக செயல்படும் தயாரிப்பாளர்களான நாம் தனியே ஒரு சங்கத்தை உருவாக்குவோம்” என்றும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இறுதியில், “நடிகர் சங்க தேர்தல் முடிந்த பிறகு வரும் வெள்ளிக்கிழமை கூடி மேற்கொண்டு முடிவெடுக்கலாம்” என்று தீர்மானித்து கலந்தார்கள்.
இன்று ஏ.எல். அழகப்பன், “தயாரிப்பாளர் சங்த்தின் பொதுக்குழுவைக்கூட்டி, தாணுவை பதவியை விட்டு நீக்குவோம்” என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
ஆக.. நடிகர் சங்க தேர்தல் முடிந்த கையோடு, தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து ரெடியாக இருக்கிறது!