சென்னை:
தமிழகத்துக்கு புதிய தலைமை செயலாளரை நியமனம் செய்வது தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முடிவெடுத்துள்ளார்
தமிழக தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீடு, அவரது மகன் விவேக் வீடு உள்பட 10 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலான அரசியலில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டத்திலும் இது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தற்போதைய தகவலின் அடிப்படையில், ராமமோகன் ராவ் வீடுகளில் இருந்து ரூ. 18 லட்சம் புதிய பணம் மற்றும் 2 கிலோ தங்கம் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் ஒரு அங்கமான நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டிருப்பதால், உரிய ஆதாரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பித்து சோதனை நடத்துவதற்கான அனுமதியை பெற்றிருப்பார்கள் என்ற பேச்சே எழுந்துள்ளது.
அதனால் இந்த சோதனையை தொடர்ந்து ராம மோகன் ராவ் எந்த நேரத்திலும் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்ற கருத்து அதிகாரிகள் மட்டத்தில் நிலவுகிறது.
இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்திலான அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த தலைமை செயலாளராக யாரை நியமனம் செய்வது என்பது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. தற்போது உள்ள ராமமோகன் ராவை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்யவில்லை என்றாலும், அவரை அந்த பதவியில் இருந்து மாற்ற வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் புதிய தலைமை செயலாளராக யாரை நியமனம் செய்வது என்பது குறித்து முதல்வர் பன்னீர்செல்வம் விரைவில் முடிவெடுப்பார் என தெரிகிறது.