சென்னை மாநாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமையில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி தருவது மற்றும் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிக்கு தன்னார்வலர்களாக பலர் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாளொன்று ரூ. 391 ஊதியமாக வழங்கப்படுகிறது.
இவர்களில் சிலரை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டி எடுத்துள்ளது, அதில் அவர்கள் கூறியிருக்கும் தகவல்கள் அவர்கள் படும் வேதனையை கூறுவதாக உள்ளது.
அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருவதற்கு அழைக்கும் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலர், தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை கொடுத்து முதலில் அதன் விலை என்னவென்று தெரிந்து வந்த பின் தான் பணத்தையே கொடுத்தனுப்புகின்றனர்.
எங்களை நம்பி பணம் கொடுப்பதில்லை, ஒரு சிலரோ அத்தியாவசிய பொருட்களை அரசு வழங்குவதாக சொல்லி இருக்கிறது, அதனால் இந்த இலவச பொருட்களுக்கு நாங்கள் பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
நாங்கள் வாங்கும் சொற்ப சம்பளத்தில் தான் எங்கள் வண்டிக்கு தேவையான பெட்ரோல் போட வேண்டிய நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எங்களை அலைக்கழிப்பதால் எங்களுக்கு மேலும் இழப்பு ஏற்படுகிறது என்கின்றனர்.
இதுதவிர, ஒரு சிலர் மதுபானங்கள் வாங்கி வர சொல்லி வற்புறுத்துவதுடன், மறுக்கும் பட்சத்தில் எங்களின் உயரதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள், ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருப்பது தெரிந்தும் அவர்கள் எங்களை இதுபோல் மிரட்டினால் நாங்கள் எங்கு சென்று மதுவாங்கி வருவது என்று புலம்புகிறார்கள்.