“தமிழ்த்தேசியம்” என்று பேசுவதன் மூலம் நீங்கள் அடைய நினைக்கிறது தனித்தமிழ்நாடா, தன்னுரிமை கொண்ட சுயாட்சி பிரதேசமா?
நாங்க வந்து… எங்க இனத்துக்காக ஒரு நாடு வேணும்னு நெனைக்கிறோம். எங்களைவிட சின்ன எண்ணிக்கை கொண்ட இனம் எல்லாம் தனி நாடா இருக்கு. செர்பியாவிலேருந்து கொசாவா பிரியுது.. அங்க வெறும் பத்து லட்சம் மக்கள்தான் இருக்கான் ஆனா நாங்க ஒலகம் பூரா 13 கோடி தமிழன் இருக்கோம்.. .வெறும் முன்னூறு நானூறு கிலோமீட்டர் சுத்தளவு உள்ளவன் எல்லாம்… பூடான், தெற்கு சூடான் இப்படி நிறைய சின்ன நாடுங்க சுதந்திரமா வாழறான். அவ்வளவு ஏன், இலங்கையை விட மூணு மடங்கு பெருசு நாங்க.. ! ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு இனம். எங்களுக்கு கலை இலக்கியம் பண்பாடு, விளையாட்டு தொன்றுதொட்ட வேளாண்மை, பாட்டு, இசை, கூத்து அறிவியல், சமூகவியல் எல்லாமே இருக்கு எங்களுக்கு! அப்படி இருக்கிற தேசிய இனமான எங்களுக்குன்னு ஒரு நாடு வேணும்னு நினைக்கிறோம்..!
அதான் கேட்கிறேன்.. தனித்தமிழ்நாடா..
(கையமர்த்துகிறார்) கேளுங்க கேளுங்க! தனக்கென்று ஒரு தேசம் இருக்கும்போதுதான் ஒரு இனம் முழுமை அடையும்! அந்த விடுதலையை நோக்கித்தான் போறோம்.. எங்களை அண்டி வந்த சிங்களன் எங்களையே அழிச்சு ஒழிக்க முயற்சிக்கும்போதுதான் எங்கள் தாய் நிலத்தை மீட்க ஈழத்தில் போராட்டம் நடத்தினோம். உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு நாடு வேணும்..! தனித்தமிழ் ஈழ சோசலிச குடியரசை அடையத்தான் போராடறோம்.
இந்தியாவுக்குள் உங்கள் கோரிக்கை தனி நாடா தன்னுரிமை கொண்ட பிரதேசமா என்பதுதான் என் கேள்வி.
இந்தியாவுக்குள்ள நாங்க இருக்கிறதா வேண்டாமாங்கிறத இந்திய ஆட்சியாளர்கள்தான் முடிவு செய்யணும்!
புரியலையே..
ஆந்திராவில் தெலுங்குதேசம்னு அய்யா என்.டி.ஆர் ஆரம்பிச்சாரு யாரும் அதை தப்பா பேசலை….! மராட்டியன், சீக்கியன், வங்காளிக்குன்னு மொழி வழி மாநிலம்னு பிரிச்சது ஏன்..? அவரவருக்குன்னு மொழி, கலை, இலக்கியம் பண்பாடு, தொன்று தொட்ட வேளாண்மை, நீர் வளம், நில வளம், மலைவளம், காட்டுவளம், பெண்ணுரிமை., அரசியல் கல்வி எல்லாம் தனியா இருக்கு. நாட்டை தமிழ்நாடுங்கிறீங்க…. அப்ப தமிழ் தேசம்தானே! இதுல வாழுற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியலாத்தானே இருக்க முடியும்?
அந்த தமிழ்த்தேசிய அரசியல் மூலமாக நீங்கள் கேட்பது தனித்தமிழ்நாடா, தன்னுரிமை கொண்ட சுயாட்சி பிரதேசமா என்பதுதான் கேள்வியே…
(சில விநாடி யோசனைக்குப் பிறகு) நான், தனித்தமிழ்நாடு கேட்கல..! இந்தியாவே கொடுக்கும்!
கேட்டாலே கிடைக்குமானு தெரியாத சூழல்ல கேட்காமயே கொடுக்கும்னு எப்படி சொல்றீங்க..?
(ஆவேசமாக) என் மக்களைக் கொன்ற இலங்கைக்கு கச்சத்தீவ கொடுக்கற.. கேட்டா கொடுத்தது கொடுத்துதான் அப்படிங்கிற.. ! என் தாய்நாட்டு மக்கள்.. என் இன மக்கள் 840 பேரை கொன்னவனுக்கு ஏன் கொடுத்தே? அப்படின்னா எங்களை இந்தியா, தன்னோட நாடுன்னு நினைக்குதா தனி நாடுன்னு நினைக்குதா? .. நீ இந்தியனா நான் இந்தியனா..? நீ நாட்டுப்பற்றாளனா நான் நாட்டுப்பற்றாளனா… அப்ப யார் தேசத்துரோகி..? (சற்றே அமைதியாகி) நல்லா கவனிச்சுப் பாருங்க.. காவிரியில நீர் கேட்கிறோம்..! நீதிமன்றத்துல போயி கேளுங்கிறான்..! நீதிமன்றம் உத்தர போட்டும் இவன் நீர் தரமாட்டேங்கிறான். அப்படின்னா, இறையாண்மைக்கு எதிரா செயல்படுறேன்னு ஆட்சிய கலைக்கணும்ல…? செய்யலையே…! அப்ப.. ஒரு தேசிய இனத்தின் உரிமையை நீ பறிக்கிற.. அற்ப தேர்தல் வெற்றிக்காக! பாஜக, காங்கிரஸ் இரண்டும் இப்படித்தான். ஒவ்வொன்னையும் கவனிங்க.. கேரளாவை கவனிங்க.. ஆந்திராவை கவனிங்க…! கோதாவரி ஆத்துல விழுந்து செத்த 29 பேருக்கு மோடி வருத்தம் தெரிவிச்சாரு. ஆனா ஆந்திராவில சுட்டுக்கொன்ன இருபது தமிழனுக்கு வருத்தம் தெரிவிக்கலை..! அதாவது விபத்துல செத்தாலும் அவன் இந்தியன். சுட்டுக்கொல்லப்பட்டாலும் இவன் தமிழன்.. அப்படித்தானே! அதுமட்டுமா…தமிழ் மீனவன் செத்தப்பவும் மோடி கண்டிக்கலை…. உளமாற அவன் (மத்திய அரசு) எங்களை இந்தியன்னு ஏத்துக்கலை..அதானே உண்மை? இந்த உணர்வு எங்களை கொஞ்சம் கொஞ்சமா எங்கே கொண்டு விடுது..? தமிழ் மீனவன் செத்தான்னு எங்களை பாக்க வைக்குதே தவிர, இந்திய மீனவன் அப்படினு எங்களை பாக்க வைக்கிறதில்ல..! தமிழர்களை இந்திய குடிமக்களா இந்திய அரசு, பாக்கறதில்லை.. அதனால இந்திய அரசுதான் எங்களுக்கு தனி நாடு கொடுக்குது.. நாங்க கேட்கல..!
அப்படின்னா மத்திய அரசின் செயல்பாடு தனிநாடு நோக்கி தள்ளுகிறது என்கிறீர்களா..?
இப்பவே மத்திய அரசு எங்களை தனிநாடாத்தான் கருதுகிறது.. தனி நாடாகத்தான் நடத்துகிறது..!
உங்கள் வாதப்படியே இந்திய அரசு தமிழ்நாட்டை தனி நாடாக கருதுவதாக வைத்துக்கொள்வோம். ஆனால் அதை எப்படி தனி நாடு என்று சொல்லமுடியும்? வரிவசூல் உட்பட உரிமைகள் இருப்பவர்தானே நாட்டை ஆள்பவர் ஆவார்?
இன்னும் ஐந்தாண்டு பத்தாண்டுகள் கழிச்சி பாருங்க.. அதுக்கான உரிமைகள் இருக்குதா இல்லையான்னு..!
அப்படின்னா நீங்க எதை நோக்கி…
(குறுக்கிட்டு) இருங்க… சமநிலை தனியரசுதான் சரியானது. ஐரோப்பிய யூனியன் போல இங்கே இருக்குற தேசிய இனங்களுக்கு தனித்தனி பாராளுமன்றம் தனித்தனி ராணுவம்தானே இருந்திருக்க முடியும்? ஒரே ராணுவம், ஒரே பாராளுமன்றம் என்பது எப்படி சரியாவும்? முப்பது கோடி பேரு இருந்தப்ப பாராளுமன்றத்தில 544 பேரை தேர்ந்தெடுக்கச் சொன்னான். இப்போ . 130 கோடி பேரு.. அப்பவும் அதே 544தானா? ஆறு தொகுதிக்கு ஒரு பாராளுமன்றம் என்பதை மூன்று தொகுதிக்கு ஒன்றா ஆக்கு.. சரி, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் தன்னாட்சி அப்படிங்கிறதுக்கே வருவோம். அவரவர் நாட்டுல அவரவர் ஆளுவோம்..! பணம் அச்சிடுதல், நாட்டின் பாதுகாப்பு, தொடர்வண்டித்துறை, வெளியுறவுத்துறை இதையெல்லாம் நீ வச்சுக்க.. மத்ததை அந்தந்த மாநிலங்களுக்கு கொடு..! இதைத்தான் நான் கேட்கிறேன். சமநிலை தனி அரசு. மத்திய அரசுக்கு இணையான ஒரு அரசு!
தமிழர் என்பதற்கு வரையறை என்ன…
-மேலும் சில கேள்விகள்.. சீமான் பதில்கள்.. 19.08.15 செவ்வாய் அன்று..)
– டி.வி.எஸ். சோமு https://www.facebook.com/reportersomu