விழுப்புரம்

பேருந்து பயணிகளிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து அமைச்சர் மா சுப்ரமணியன் விசாரித்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் 13 ஆம் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.   தடுப்பூசி போடாதவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடந்து வருகிறது.    அதில் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் விழுப்புரம் சென்றுள்ளார்.

அமைச்சர் மா சுப்ரமணியன் தினமும் காலை தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருபவர் ஆவார்.  இன்று அதிகாலை சுமார் 4 மணி முதல் அவர் விழுப்புரம் பகுதியில் நடைப்பயிற்சி செய்தார்.  அந்த வேளையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு பேருந்து வெளியே வந்தது.  அமைச்சர் அந்த பேருந்தை நிறுத்தி அதில் ஏறினார்.

அப்போது சுப்ரமணியன் பேருந்து பயணிகளிடம் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனரா என விசாரித்து உள்ளார்.   தடுப்பூசி போடாதவர்கள் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.    அவர் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று ஆய்வு செய்கிறார்.