புதுடெல்லி:
நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 ஏ பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளை கைது செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் பாரிக், ” கடந்த 2015-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டபின், அதே பிரிவின் கீழ் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பிரிவால் மக்களின் அடிப்படை உரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது.
இந்த பிரிவை எதிர்த்து முதல் பொது நல வழக்கை கடந்த 2012-ம் ஆண்டு சட்டக் கல்லூரி மாணவி ஸ்ரேயா சிங்கால் தாக்கல் செய்தார். சிவசேனா தலைவர் பால்தாக்கரே இறந்தபோது, கடையடைப்பு நடந்ததை எதிர்த்து ஷாஹின் தாடா என்ற பெண் முகநூலில் பதிவிட, அதை ரினு சீனிவாசன் என்ற பெண் ‘லைக்’ செய்திருந்தார்.
இருவரையும் இதே சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். உரிமையைப் பறிக்கும் இந்த பிரிவை எதிர்த்துத்தான் ஸ்ரேயா சிங்கால் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2013 ம் ஆண்டு மே மாதம் 16 ம் தேதி பிறப்பித்த உத்தரவில், சமூக வலைதலங்களில் ஆட்சேப கருத்துகளை பதிவு செய்வோரை, ஐஜி மற்றும் துணை காவல் ஆணையர் அளவிலான அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே போலீஸார் கைது செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
66ஏ பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கிய பின், அதே பிரிவின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு நீதிபதி ஆர்.எப். நரிமன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.