டில்லி
தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பின் படி கேபிள் மற்றும் டிடிஎச் சேவை வழங்குவோர் இன்னும் கட்டணங்களை அறிவிக்கவில்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண டிடிஎச் இணைப்பு பெற்றுள்ளவர்கள் அரை வருடம் அல்லது ஒரு வருட சந்தா அளிக்கும் போது பல கழிவுகளை சேவை நிறுவனங்கள் அளித்து வந்தன. அத்துடன் ஒரு குழுமத்தில் சந்தா செலுத்தினால் மட்டுமே அந்த குழுமத்தில் உள்ள அனைத்து சேனல்களையும் காண முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்தி பார்க்கலாம் என அறிவித்தது. அந்த உத்தரவு சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29 முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்படிருந்தது. தற்போது அது பிப்ரவரி 1 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தின் படி இலவச சேனல்களை மட்டும் பார்க்க வாடிக்கையாளர்கள் ரூ. 150 + 18% ஜிஎஸ்டி என மாதாமாதம் செலுத்த வேண்டி இருக்கும். இதில் 100 இலவச சேனல்கள் இருக்கும். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு 25 சேனல்களுக்கு ரூ. 20 அதிகம் செலுத்த வேண்டி வரும். அதே நேரத்தில் இலவச சேனல்களில் 100 க்குமேல் 15 சேனல்களுக்கு குறைவாக தேர்ந்தெடுப்பவர்கள் ஒவ்வொரு சேனலுக்கும் ரூ. 1 மட்டும் செலுத்தினால் போதுமானது.
அதாவது ஒருவர் 114 சேனல்கள் மட்டும் தேர்வு செய்தால் அவர் ரூ.153 +14 என கட்டணம் செலுத்தினால் போதுமானது.. அதை போல 116 முதல் 125 வரை தேர்வு செய்வோர் ரூ. 153+20 என கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில் இந்த முறையில் எச்டி சேனல்களை தேர்வு செய்தால் அது இரண்டு சேனலாக கணக்கிடப் படும்
எனவே ஒரு வருடம் அல்லது ஆறு மாத சந்தாவை ஒரேயடியாக செலுத்துவதை விட இவ்வாறு சேனல்களை தேர்ந்தெடுப்பது சரியான முறையாகும். அதே நேரத்தில் ஒவ்வொரு சேனல்களின் கட்டணங்கள் குறித்து சேவை அளிப்போர் இறுதி முடிவை இன்னும் அளிக்கவில்லை. எனவே சிறிது காலம் காத்திருப்பது மேலும் பயனளிக்கலாம்.