டவுசருடன் தேர்வு எழுத வைத்த விவகாரம்: ராணுவ தலைமைக்கு சிக்கல் army
டவுசருடன் தேர்வு எழுத வைத்த விவகாரம்: ராணுவ தலைமைக்கு சிக்கல்

பாட்னா:
முறைகேட்டை தவிர்க்க தேர்வாளர்களை டவுசர் அணிந்து தேர்வு எழுத வைத்த விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் ராணுவ பணியில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வு நேற்று முன் தினம் நடந்தது. இதில் 1,159 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். பொதுப் பணிக்கான ராணுவ வீரர்கள், எழுத்தர் மற்றும் தொழில்நுட்ப பிரிவுபணிகளுக்கு இந்த தேர்வு நடந்தது.
தேர்வு தொடங்குவதற்கு முன், தேர்வு எழுதுவோர் எதுவும் ‘பிட்’, செல்போன், கால்குலேட்டர் போன்ற உபகரணங்களை எடுத்து செல்கிறார்களா? என்பதை தேர்வு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் சோதனை செய்வார்கள். சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
பீகாரில் நடந்த தேர்வில் 1,159 பேர் கலந்துகொண்டதால், அனைவரையும் சோதனை செய்ய காலதாமதாகும். அதனால், முறைகேட்டை தவிர்க்க தேர்வு எழுதுவோர் ஆடைகளை அவிழித்துவிட்டு, டவுசர் மட்டும் அணிந்து தேர்வு எழுத ராணுவ அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இந்த முறையிலேயே தேர்வு நடந்து முடிந்துவிட்டது. தேர்வாளர்கள் டவுசருடன் தேர்வு எழுதிய செய்தி காட்டுத் தீ போல பரவியது. இது தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வெளியானது.
இதையடுத்து குமார் என்பவர் பாட்னா உயர்நீதிமன்றத்தில் செய்திகளின் அடிப்படையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
‘இந்த செயல் மனித உரிமை மீறலாகும். கண்ணியத்துடன் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஒழுக்கத்துக்கு பெயர் பெற்ற இந்திய ராணுவம், தேர்வு நடைமுறையில் இது போன்று டவுசருடன் தேர்வாளர்களை தேர்வு எழுந்த நிர்பந்தம் செய்து ஒழுக்க கேடான செயலாகும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர், முசாப்பர்பூர் ராணுவ ஆட்கள் தேர்வு அலுவலக இயக்குனர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பரிக்கர் இதில் தலையிட்டு, ராணுவ தலைமை அதிகாரியிடம் இருந்து அறிக்கை கேட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பீகாரில் நடந்த ஒரு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, மாணவர்களின் பெற்றோர், நண்பர்கள் பள்ளி கட்டட சுவர்களில் ஏறி புத்தகம், ‘பிட்’களை மாணவர்களுக்கு வழங்கினர். இது தொடர்பான புகைப்படங்கள் செய்திதாள்களிலும், சமூக வளைதளங்களிலும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போதும் அதே பீகாரில், முறைகேடை தவிர்க்க டவுசருடன் தேர்வு எழுத வைத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.