download
முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் கூறிய குற்றச்சாட்டும், உதய் மின்திட்டத்தில் தமிழகம் மட்டும் இணையவில்லை என்று அவர் கூறியதும், பொய்யான தகவல்கள் என்று ,   தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அம்பலமாகி இருக்கிறது.
சமீபத்தில் டில்லியில் பேசிய மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “உதய் மின்திட்டம் குறித்து தமிழக முதலமைச்சருடன் பேச பலமுறை முயற்சி செய்தேன். கடிதங்களும் எழுதினேன். ஆனால் அவரை சந்திக்கவே முடியவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த தீபக் என்பவர், இதுதொடர்பான கடிதம் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்களை அளிக்கும்படி தகவல் உரிமை சட்டத்தின் கீழ்  கோரி இருந்தார்.  மேலும், முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க எத்தனை முறை அனுமதி கேட்கப்பட்டு இருந்தது, என்ற தகவலையும் தீபக் கேட்டிருந்தார்.  அதற்கு மத்திய மின்சாரத்துறை அனுப்பியுள்ள பதிலில், அதுதொடர்பாக எந்த ஒரு தகவலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உதய் மின் திட்டத்தில் தமிழகம் மட்டும் இணையவில்லை என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்த  தகவலும் பொய் என்பது தெரியவந்திருக்கிறது.  அந்த திட்டத்தில் தமிழகம் உட்பட கர்நாடகா, கேரளா, தெலுங்கானா என மொத்தம் 14 மாநிலங்கள் இணையவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாத கோபத்தில், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டுவதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.