jeyenthirar
சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கடந்த 2002–ம் ஆண்டு செப்டம்பர் 20–ந்தேதி ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயஸ்ரீ, வேலைக்காரர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து பட்டினம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, சோம சேகரகனபாடிகள் என்ற பெயரில் ஜெயேந்திரருக்கு எதிராகவும், அவர் மீது குற்றம் சுமத்தியும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கு மொட்டை கடிதங்கள் பல சென்றன.
இந்த கடிதங்களை ராதாகிருஷ்ணன் அனுப்புவதாக நினைத்து அவர் மீது இந்த தாக்குதல் நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்பிரமணியம், அப்பு, கதிரவன், மீனாட்சிசுந்தரம், ஆனந்த், கண்ணன், குமார், லட்சுமணன், பூமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ரவி சுப்பிரமணியம் அப்ரூவராக மாறினார்.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, கதிரவன், அப்பு ஆகியோர் இறந்து விட்டனர். ஜெயேந்திரர் உட்பட 9 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில், போலீஸ் தரப்பில் 55 சாட்சிகள், சாட்சியம் அளித்தார்கள். அதேபோல, 220 சாட்சி ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணைகள் முடிந்த நிலையில், ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், ‘இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெயேந்திரர் உள்ளிட்ட 9 பேரிடம் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டியதுள்ளது. எனவே, இந்த 9 பேரும் வருகிற 28–ந்தேதி நேரில் ஆஜராகவேண்டும்’ என்று கடந்த 16–ந்தேதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 9 பேர் நேரில் ஆஜரானார்கள். பின்னர் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து ஜெயேந்திரரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் 100 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், பல கேள்விகளுக்கு தெரியாது, இல்லை, பொய் என்று ஜெயேந்திரர் பதிலளித்தார்.