சென்னை :
துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமியை, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்த வீடியோ காட்சிகளை வாட்ஸ் அப்பில் உலவ விட்ட ஜெயா டி.வி. விஷுவல் எடிட்டர் புலி என்ற சக்திவேல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
15 நாட்கள் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சோ ராமசாமி, மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
துக்ளக் பத்திரிகை அதிபரும் ஆசிரியருமான சோ என்கிற ராமசாமி உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர், முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான நண்பர்களுள் ஒருவர்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் சோவை, ஜெயலலிதா சந்தித்து நலம் விசாரித்தார். இந்த காட்சிகள் ஆடியோ இல்லாமல், புகைப்படமாக மட்டுமே ஊடகங்களிலும் வெளியாகின.
பொதுவாகவே, முதல்வர் நிகழ்ச்சிகளில் ஜெயா டிவியைச் சேர்ந்த கேமராமேன்கள், செய்தியாளர், மற்றும் தமிழக அரசின் செய்திப்பிரிவு கேமராமேன்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தவிர அரசின் செய்திப் பிரிவில் இருந்து ஜெயா டி.வி. தவிர மற்ற ஊடகங்களுக்கு அளிக்கப்படும் காட்சிகளில் ஆடியோ இருக்காது.
இந்த நிலையில், ஜெயலலிதா, சோ இருவரும் சந்தித்து உரையாடிய அசல் காட்சிகள் ஆடியோவுடன் வாட்ஸ் அப்பில் பரவியது. இதனால் முதல்வர் தரப்பில் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிகளில் ஜெயா டி.வி.க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே இந்த சந்திப்பை முழு ஆடியோவுடன் வெளியிட்டது யார் என்பது குறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினார்கள்.
விசாரணையில் ஜெயா டிவி. யில் பணிபுரியும் விஷுவல் எடிட்டர் புலி என்கிற சக்திவேல் தான் வெளியிட்டார் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார் 15 நாட்கள் காவலில் சிறையில் அடைத்தனர்.