கடந்த பல மாதங்களாகவே, “தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: மதுக்கடைகளை முழுவதுமாக மூட வேண்டும்” என்று பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மது எதிர்ப்பு போராளி சசி பெருமாள் மரணத்தை அடுத்து இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன. “டாஸ்மாக்கை மூடு” என்று பாடகர் கோவன் பாடியதை அடுத்து அவர் கைது செய்ப்பட்டதும், மீண்டும் மது எதிர்ப்பு உணர்வு தமிழகத்தில் எழுந்தது.
இதற்கிடையே, “மதுக்கடை எண்ணிக்கை குறைக்கப்படும்” என்றும், “மதுக்கடைகளின் நேரம் குறைக்கப்படும்” என்றும் யூகங்கள் கிளம்பினன.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா இதுகுறித்த எந்தவித அறிக்கையும் விடவில்லை. இது போன்ற பேச்சுக்களை அவர் புறக்கணித்தார்.
மேலும், சட்டமன்றத்திலேயே மதுவிலக்குத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “மதுவிலக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.
இந்த நிலையில் பலரும் கோரிய மதுக்கடை மூடலை தற்போதைய மழை செய்துவிட்டது.
சில நாட்களுக்கு முன் பெய்த பெரு மழையின்போது கூட மழைப்பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்கின. மழைநீரில் நின்றபடியே குடிமகன்களும் மது குடித்துச் சென்றனர்.
ஆனால் கடந்த செய்வாக்கிழமை மதியம் முதல் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் பெய்ய் ஆரம்பித்துள்ள கனமழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், கோட்டூர்புரம், சைதை, தி.நகர், மேற்கு அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் நான்கடி உயரம் வரை வெள்ளம் தேங்கியது. இதையடுத்து வேறு வழியில்லாமல் பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
கடந்த புதன் கிழமை முதல் ஐந்தாம் நாளாக இந்த மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.