சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த நேரத்தில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசும், அரசியல் கட்சியினரும், ஜல்லிக்கட்டு பேரவை உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து வலியுறுத்தினர். கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாத நிலையில், அவசர சட்டம் பிறப்பித்தாவது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்குவது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து அட்டார்னி ஜெனரலுடன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில் ‘‘ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. தமிழர்களின் கலாச்சார விளையாட்டிற்கு அனுமதி வழங்கி பெருமை சேர்த்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், குரல் கொடுத்த அனைவருக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றி’’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரகாஷ் ஜவதேகர் கூறியுள்ளார். தொலைபேசியில் பேசியபோது இத்தகவலை தெரிவித்தததாக பொன். ராதாகிருஷ்ணன் கூறிஎள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு அனுமதி அளித்தது என்ற அறிவிப்பு வெளியாகியதும், மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.