images (1)
சென்னை:
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது, அந்த விளையாட்டின் ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்திருக்கிறது. பல அமைப்புகளும் போராட்டத்தில் இறங்க தயாராகிவருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் இன்று சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. இது, ஜல்லிக்கட்டுக்காக ஆவலுடன் தயாராகி வந்த அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உட்பட, பல மாவட்டத்தில் மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
அலங்காநல்லூரில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். வாடி வாசல் முன்பு கூடி சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து முழக்கமிட்டபடி இருக்கிறார்கள்.
இந்த உத்தரவு குறித்து வீரவிளையாட்டு பேரவையின் மாநிலத் தலைவர் ராஜசேகரனிடம் இது குறித்து கேட்டபோது, ஆவேசமாக பேசினார்:
“ஜல்லிக்கட்டு என்பது மக்களின் குல தெய்வ வழிபாட்டில் ஒன்றாக பாரம்பரியமாக நடந்து வருவது. ஆனால் அதை இன்று கேலிக்கூத்தாக்கி விட்டார்கள். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கியே தீருவோம். அதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுப்போம்” என்றார்.
மதுரையைச் சேர்ந்த மாடுபிடி வீரரான, குமார், “உச்ச நீதிமன்றத்தின் தடை எங்களையும் மக்களையும் மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கிவிட்டது. ஜல்லிக்கட்டு நடக்கும் என்பதால், அதற்காக தயாராகி வந்தோம். இந்த நிலையில் தடை என்பதை ஏற்கவே முடியாது” என்றார்
மதுரை மாவட்டம் பாலமேடு, அவனியாபுரத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பலர் “தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்” என்று கூறி வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.