சென்னை:
திமுகவின் தலைமைக் கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கேவன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள். பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிக்கட்சிகளுடன் கூட்டணி வைப்பதில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடன்பாடில்லை” என்றெல்லாம் பல கருத்துக்களைக் கூறினார். இது அரசியல்வட்டாரத்தில், பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திமுக தலைமைக்கழகம், “அதெல்லாம் டி.கே.எஸ். இளங்கோவனின் சொந்தக் கருத்து” என்று அறிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தின் செயலாளர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் ஆங்கில நாளேட்டில் கொடுத்துள்ளதாக வந்துள்ள பேட்டியில் இடம் பெற்றுள்ள செய்திகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்துகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.
அவர் பெயரில், அந்தப் பத்திரிகையில் வந்துள்ள செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சம்மந்தமே இல்லை. இவ்வாறு பொறுப்பற்ற முறையில் தலைமைக் கழகத்திலே உள்ளவர்கள் பேட்டி அளிப்பதும், செய்திகளைக் கொடுப்பதும் ஏற்கத்தக்கதல்ல. கழகத்தைப் பற்றி அந்த ஏட்டில் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக வந்துள்ள செய்திகள் அனைத்தும் தவறானவை என்பதால், கழகத் தோழர்கள் யாரும் அதனை நம்ப வேண்டாமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டி.கே.எஸ். இளங்கோவனின் பேட்டி வெளியான சிலமணி நேரங்களிலேயே திமுக தலைமைக் கழகம் மறுப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“வழக்கமாக, பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்தான், தன் கட்சிக்காரர்களின் கருத்துக்கள் பலவற்றுக்கு “அது அவரது சொந்தக் கருத்து” என்று சொல்லி சமாளிப்பார். அதே பாணியை திமுக தலைவர் கருணாநிதி பின்பற்றியிருக்கிறார்” என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.