bala

சிவகங்கை: காரைக்குடி அருகே செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் மீது திமுகவினர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதற்கு பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தன்னை விமர்சித்ததற்காக ஆனந்தவிகடன் வார இதழ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஏற்கெனவே இதே விகடன் உடப்ட பல இதழ்கள் மீது தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ஆண்ட கட்சியான தி.மு.க.வும் ஊடகம் மீதான தாக்குதலில் சளைத்தது இல்லை என்பதையும் நிரூபித்துள்ளது சிவகங்கை சம்பவம்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையினை அப்பகுதியின் திமுகவின் முன்னாள் நகரமன்ற துணைத்தலைவரும், திமுகவின் நகரத் தலைவருமான பொரி.பாலா என்பவர் குத்தகைக்கு எடுத்திருக்கறார். அவர் இரண்டு வருட காலமாக நகராட்சிக்கு எந்தவித வரியும் செலுத்தவில்லை.
இதையடுத்து நகராட்சி ஆணையர் சார்பில் பாலாவுக்கு 8 முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் 7 தமிழின் செய்தியாளர் பாலமுருகன் மீது திமுக நகரத்தலைவர் பாலா உட்பட ஏழு பேர் கொண்ட கும்பல் கொலைவெறித்தாக்குதல் நடத்தியது. உயிருக்கு போராடிய செய்தியாளர் பாலமுருகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், செய்தியாளரைத் தாக்கிய பெரி பாலாவைக் கைது செய்து செய்தனர்.

செய்தியாளர் மீது தாக்கிய தி.மு.க.வினரை கண்டித்து பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.