சென்னை: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 4 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் அதன் கூட்டாளிகளான மேலும் 8அமைப்புகளுக்கு மத்திய அரசு 5ஆண்டு காலத்திற்கு தடை விதித்து உள்துறை அமைச்சகம் 2022ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த இயக்கங்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் சட்ட விரோதமான முறையில் தொடர்பில் இருந்ததும், அதன்முலம் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால், இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை புரசைவாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகளின் 4 பேரின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு பிரிவினர்,
புரசைவாக்கம் பகுதியில் தாக்கர் தெருவில் வசித்து வரும் சையது அபுதாகிர் என்பவரின் வீட்டில் காலை 9.20 மணி முதல் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுபோல, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் இஸ்மாயில் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் துரப் என்னும், துடைப்பம் மொத்த வியபாரம் செய்து வருபவர் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
வேப்பரி ஜோதி வெங்கடாசலம் தெருவில் இஸ்மாயில் அக்ஸர் என்பவர் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.